கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கிய அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன்ராஜ்

Ministers News

கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கிய அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன்ராஜ்

தூத்துக்குடி, செப். 22: 

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தூத்துக்குடியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தலைமை வகித்தார். தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு தட்டு, தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களை அமைச்சர் வழங்கினார். மேலும், ஐந்து வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன.

அப்போது அமைச்சர் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சமுதாய வளைகாப்பு விழா நடத்திட 2026-2027ஆம் நிதியாண்டில் வட்டாரத்துக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் இம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு ரூ.3,25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் கூறும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார். இதில், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் ஊரகம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட 200 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.

விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) பிரேமலதா, நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓட்டப்பிடாரத்தில் சமுதாய வளைகாப்பு விழா, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தலைமை வகித்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அவர் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசியதாவது: கர்ப்பிணிகளுக்கு தாய் வீட்டுச் சீதனமாக தட்டு, தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல், பூ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களும், ஐந்து வகையான கலவை உணவுகளும் வழங்கப்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து, மருத்துவப் பரிசோதனை, குழந்தை பராமரிப்பு, தடுப்பூசி மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும். கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்கி, அதன் பின்னர் தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிறைந்த இணை உணவையும் வழங்க வேண்டும் என்றார்.

 நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ஐய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, ஐகோர்ட் ராஜா, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.