நான்கு மாவட்டங்களுக்கு 40 இலட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Health Mninister
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த 17, 18ம் தேதிகளில் பெய்ததையொட்டி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரினால் பரவும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் ரூ.20.16 இலட்சம் செலவில் 40 இலட்சம் குளோரின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது. பொதுமக்களுக்கு குளோரின் மாத்திரைகளை விநியோகம் செய்யும் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (24.12.2023) ஏரல் பேரூராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வீட்டிற்கு தலா 10 குளோரின் மாத்திரைகளை வழங்கினார்.
அப்போது குளோரின் மாத்திரையை பயன்படுத்தும் முறைகள் குறித்து அமைச்சர் பொதுமக்களிடம், ‘’பாதுகாப்பில்லாத குடிநீரை பருவதால் நீரினால் பரவும் நோய்களாகிய காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவ வாய்ப்புகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் நன்கு கொதிக்க வைத்த குடிநீரையே பருக வேண்டும் என ஏற்கனவே பொது சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் குளோரின் மாத்திரையைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் மட்டுமே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. 500 மில்லி கிராம் எடை கொண்ட ஒரு குளோரின் மாத்திரையில் 25 மில்லி கிராம் செயலூட்டப்பட்ட குளோரின் உள்ளது. ஒரு குளோரின் மாத்திரை, ஒரு குடம் குடிநீர் அல்லது 20 லிட்டர் குடிநீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். குளோரின் மாத்திரை குடிநீரில் கலந்த பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அக்குடிநீரை பருகஃசமைக்க வேண்டும். குளோரின் மாத்திரையை நேரடியாக பொதுமக்கள் உட்கொள்ளக்கூடாது. குளோரின் மாத்திரை குழந்தைகள் கையில் கொடுக்கக் கூடாது. பெரியவர்களிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். குளோரின் மாத்திரைகள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் களப்பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 10 குளோரின் மாத்திரைகள் வீதம் விநியோகிக்கப்படும். இந்த அவசரகால செயல்முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ள குடிநீர் விநியோக முறை சரிசெய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வரை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அப்போது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கதன்தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் (சோழவந்தான்), அப்துல் சமது (மணப்பாறை), ஏரல் பேரூராட்சி மன்றத் தலைவர் சர்மிளா, இணை இயக்குநர்(தடுப்பூசிப் பணிகள்) மரு.வினைய், துணை இயக்குநர்கள் மரு.பொற்செல்வன் (தூத்துக்குடி), மரு.குமார் (கள்ளக்குறிச்சி), மரு.விஜய் (சிவகங்கை), வட்டார மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.