ரத்தம் சிந்தி, மொட்டை போட்டு தோல்வியை ஒப்புக் கொள்ளும் தொண்டர்கள் - விபரம் அறியாமல் ஆதரிக்கும் தலைவர்கள்
Election news

தனக்கானதை தாண்டி மற்றவர்களும் அடங்கிய விவகாரங்களில் தாம் எதற்காக செய்கிறோம்? இப்போது செய்வது சரியா தவறா? என்று தெரியாமலே சிலர் செயல்படுவது உண்டு. அப்படித்தான் அதிமுக தொண்டரும், அவரை ஆதரிக்கும் தலைவர்களும் செய்து வருகின்றனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது அதிமுக அணியும், பாஜக அணியும். 40 தொகுதிகளையும் அள்ளியிருக்கிறது திமுக அணி. இருந்தாலும் கடந்த தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதத்தைவிட இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் கூடியிருக்கிறது என்று விளக்கி வருகின்றனர் அதிமுகவினரும், பாஜகவினரும். ஆனாலும் அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர்கள் மீது தோல்வி பிம்பம் உச்சப்படுத்தப்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோற்றுவிட்டது என்றும், அண்ணாமலை தலைமையினால் பாஜக தோற்றுவிட்டது என்றும் தோற்றத்தை உருவாக்க பலரும் பல வழிகளில் மெனக்கிடுகிறார்கள். இதில் அண்ணாமலைக்கு எதிரான போர் கடுமையாக உள்ளது. அண்ணாமலையை தூக்கினால் மட்டுமே தமிழக பாஜக வளர்ச்சியை தடுக்க முடியும் என்று பாஜகவை எதிர்ப்போர் கருதுவதாக தெரிகிறது. அதுபோல் அதிமுகவில் அனைவரையும் சேர்க்க வேண்டும் என்று விரும்புவோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை இப்படி மறைமுகமாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும் தோற்றது என்கிற தோற்றத்தை அவர்களுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு எதிரான மீடியாக்கள், பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி வருகின்றனர். இதுக்கிடையில் அதிமுக - பாஜக கூட்டணி இருந்திருந்தால் 20 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகி வேலுமணி எதார்த்தமாக கூறிவிட்டார். அதே கருத்தை ஆமோதித்தார் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தென்சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை செளந்திரராஜன். வேலுமணி எதார்த்தத்தை கூறிவிட்டு நிறுத்திவிட்டார். தமிழிசையோ, எங்கள் கருத்தை அண்ணாமலை கேட்கவில்லை என்று கூடுதலாக ஒரு வார்த்தையை சொல்ல, அது பெரிதாக்கி போனது. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அண்ணாமலை வியூகம் அமைக்கிறார். தமிழிசையோ தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து பேசுகிறார் என்பதை விபரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த யுத்தத்தில் பாஜகவின் அண்ணாமலைக்கு எதிரான செய்தியே அதிகம் வெளி வருகிறது. அவரை தூக்கினால் மட்டுமே தமிழக பாஜக வளர்ச்சியை தடுக்க முடியும் என்று கருதுவோர் செயல்படுகின்றனர். ஆனால் தமிழக பாஜகவிற்கு கிடைத்த பொக்கிஷமாக அண்ணாமலையை அக்கட்சியினர் பார்த்து வருகின்றனர். அண்ணாமலையால் மட்டுமே தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியும் என்று அவர்களும், நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் கருதுகின்றனர்.
இந்த அக்கபோருக்கு நடுவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் என்று சவால்விட்ட தூத்துக்குடியில் ஒரு அதிமுக தொண்டர், கட்சி தோற்றதால் தனது காலில் வெட்டி ரோட்டில் ஒரு சொட்டு ரத்தத்தை தெளித்துள்ளார். அதுபோல் அதே மாவட்டம் உடன்குடி பகுதியில் பாஜக நிர்வாகி ஒருவர் தலையில் கட்சி தோற்றுவிட்டது என்பதை ஒப்புக் கொண்டு மொட்டைபோட்டு தெருவில் வலம் வந்திருக்கிறார். இந்த தகவல் மீடியாக்கள் மூலம் ஏகத்துக்கும் பரவுகிறது. இதை பார்த்த அதிமுக நிர்வாகிகள் பலரும் அந்த தொண்டரை சந்தித்து விசாரிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி முதல் சசிகலா வரை அவரிடம் பேசிவிட்டனர். இந்த செய்தியும் ஊடகம் மூலம் வெளியே வருகிறது.
இதன் மூலம் அதிமுகவுக்கு ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது என்று சமாளித்து வந்தது போச்சு. தலைவர்கள் அவர்களை அறியாமலே அந்த தொண்டர் மூலம் அதை வெளியில் தெரிவித்துவிட்டனர். இப்போது எதிரிகள் நினைத்ததுபோல் தொண்டர்கள் மத்தியில் கட்சி தோற்றுவிட்டது என்கிற சோர்வு நிலைபெற்றுவிட போகிறது என்றே தெரிகிறது. இதே நிலைதான் ஓட்டு சதவீதம் கூடியிருக்கிறது என்று கதறிக் கொண்டிருக்கும் அண்ணாமலை நிலையும். கட்சி தொண்டர் மொட்டை போட்டி தெருவில் சுற்றி அதை செய்தியாக்கிவிட்டார்.
இதையெல்லாம் எதிரணியை சேர்ந்த மீடியாக்களும், பத்திரிக்கைகளும் விருப்பத்துடன் வெளியிட்டு வருகின்றனர். இனியாவது அறிந்து கொள்வார்களா என்று பார்ப்போம்?.