ராகுல்காந்தியின் 2 ஆண்டு தண்டனைக்கு இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Rahul Gandhi
ராகுல்காந்தியின் 2 ஆண்டு தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகத்தில் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி மோடி சமூகத்தினரை விமர்சிக்கும் வகையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. இது குறித்து ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் மாநிலம் பாஜக எம்எல்ஏ புவனேஷ்மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மார்ச் 23ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை குஜராத் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில் ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் எதன் அடிப்படையில் ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது? ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கியிருந்தால் கூட அவரது மக்களவை பதவி தப்பியிருக்கும். எம்பி பதவியில் தொடர்ந்திருப்பார் என்று கூறிய நீதிபதிகள் ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை விதித்தது ஏன் என கீழமை நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் ராகுல் காந்தி குற்றவாளி என்ற கிழமை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ராகுலின் இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் அவர் எம்பியாக தொடருகிறார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.
எனிலும் ராகுல் காந்தி குற்றமற்றவர் என்றோ, அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என்றோ உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ராகுல்காந்தி மீது விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது, ரத்து செய்து முடிவிற்கு கொண்டு வருவதாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.