தமிழிசையை சந்தித்து பேசிய அண்ணாமலை - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
Bjp News
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியதை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்தது. பாஜகவோடு கூட்டணி கிடையவே கிடையாது என்று வீரமாக பேசி வந்த அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகி வேலுமணி, பாஜகவோடு கூட்டணி வைத்திருந்தால் அதிமுக அணி வெற்றி பெற்றிருக்கும் என்று வாய்ஸ்விட்டார். அதையே தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றுபோன முன்னாள் ஆளுநர் தமிழிசைசெளந்திரராஜனும் தெரிவித்தார். அத்தோடு அண்ணாமலை அந்த வியூகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மாநில பாஜக தலைவரை விமர்சிக்கவும் செய்தார்.
வேலுமணி கருத்தை அனுமானம் என்று சமாளித்த அதிமுகவினர், பாஜகவோடு கூட்டணி என்கிற கருத்தை கடுமையாக கண்டித்தனர். பதிலுக்கு அண்ணாமலையும், 2026ம் ஆண்டிலும் அதிமுகவோடு கூட்டணி கிடையாது என்று கூடுதல் அழுத்தம் கொடுத்தார். சமூக வலைதளங்களில் ஏகத்துக்கும் விவாதங்கள் போய்க் கொண்டிருக்க, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற தமிழிசையை பார்த்து மத்தியமைச்சர் அமித்ஷா கையசைத்து பேசியது பல்வேறு யூகங்களை கிளப்பியது. பொதுவெளியில் கண்டித்தார் என்கிற குற்றசாட்டு பரவி வந்த நிலையில் அது அப்படி அல்ல என்கிற அர்த்தத்தில் அதற்கு தமிழிசை விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று(14.06.2024) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை, சாலிக்கிராமத்தில் உள்ள தமிழிசை செளந்திரராஜன் வீட்டிற்கு சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பரஸ்பரம் இருவரும் வருத்தங்களை மறந்து கட்சி பணியில் முழுமையாக ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனராம்.
இவர்களின் சந்திப்பு நல்ல பண்பாகவே பார்க்க முடிகிறது. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று நினைப்போர் இவர்கள் குறித்த விமர்சனங்களையே முன்னிலை படுத்தியிருப்பர். அதற்கு இவர்கள் வாய்ப்பு அளிக்க வில்லை.