மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : ராகுல்காந்தி கண்டனம்

congress news

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : ராகுல்காந்தி கண்டனம்

நாடு முழுவதும் 2008-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) தொடர்பான புதிய சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், இந்தத் திட்டம் இனி ‘விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்’ என்ற பெயரில் செயல்படவுள்ளது.

இதுவரை ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிர்வு செய்யும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அதிகாரப்பூர்வமாக ‘விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் – கிராமின்’ என அழைக்கப்படுகிறது. இதனைச் சுருக்கமாக ‘வி.பி., ஜி ராம் ஜி’ (V.P.GRAMG) என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த மசோதா, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.

அரசின் நிலைப்பாடு

மத்திய அரசு தரப்பில், இந்த மாற்றங்கள் ஊரக மக்களின் வருமானத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ‘விக்சித் பாரத்’ என்ற நீண்டகால வளர்ச்சி இலக்கை அடையவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்கள் அதிகரிப்பதன் மூலம் ஊரக பொருளாதாரம் வலுப்பெறும் என்றும், கட்டமைப்பு வளர்ச்சிக்கும் இது துணைபுரியும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சட்டம் ஜனநாயக நடைமுறைகளை புறக்கணித்து கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: “பொது மக்களிடம் எந்த விவாதமும் நடக்கவில்லை. பார்லிமென்டிலும் விவாதிக்கப்படவில்லை. மாநிலங்களின் அனுமதியும் பெறப்படவில்லை. ஜனநாயகத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் மோடி அரசு புல்டோசரால் இடித்து தள்ளியுள்ளது. இது வளர்ச்சி அல்ல; அழிவு. இதற்கான விலையை கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்த நேரிடும்,”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் சமூக தாக்கம்

MGNREGS திட்டம் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கோடிக்கணக்கான ஊரக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார பாதுகாப்பை வழங்கும் முக்கிய சமூக நலத் திட்டமாக இருந்து வருகிறது. இதன் பெயர் மாற்றம், நிதி பகிர்வு முறை மற்றும் நிர்வாக மாற்றங்கள் ஆகியவை எதிர்காலத்தில் மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதனால், புதிய ‘வி.பி., ஜி ராம் ஜி’ சட்டம் நடைமுறையில் அமல்படும் போது, அதன் செயல்பாடு, ஊரக வேலை வாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாநில–மத்திய உறவுகள் மீது இதன் தாக்கம் ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட உள்ளன.