மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி

Thoothukidi Mayor

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைத்தல், அனைத்து பகுதிகளுக்கும் ஆற்றுத்தண்ணீரை குடிநீராக வழங்குதல், மாநகராட்சியின் அனைத்து எல்லைகளையும் இணைக்கும் வகையில் மின் விலக்குள், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் மற்றும் மாநகர மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மண்டலம் வாரியாக வாரம்தோறும் புதன்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம். 

அவ்வாறு நடத்தப்பட்ட குறைதீர்க்கும் முகாம்களில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து 30 பேருக்கு ஆணைகளை வழங்கினார். அப்போது அவர், தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக நடத்தப்படும் மக்கள் குறைகளை தீர்க்கும் முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. மாநகராட்சியில் சில வார்டுகளில் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், 4, 5, 9, 10, 11, 52, 54, 57, 58 ஆகிய வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யும் முறை சோதனை அடிப்படையில் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இதேபோல் மாநகராட்சி பகுதி முழுவதும் தினசரி குடிநீர் சப்ளை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால்களில் போடகூடாது. அவைகள் அடைப்பை ஏற்படுத்தி தண்ணீர் செல்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த விசயத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, உதவி ஆணையர்கள் பாலமுருகன், கல்யாணசுந்தரம், சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டு ராஜா, ரவீந்திரன், வடக்கு மண்டல தலைவரும், திமுக பகுதி செயலாளருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ்,போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.