வட மாநிலத்தவர் என்று பொதுவாக அழைப்பதை தவிர்க்கலாமே!
National
சென்னை,தை.03(17.01.2026)
வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் மாவட்டம் தாண்டி, மாநிலம் தாண்டி, வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிப்பிடும்போது “வட மாநிலத்தவர்” என பொதுவாக அழைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்பவர்களை குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அழைப்பதைப் போல, மாநிலம் தாண்டி வாழ்பவர்களை அந்த மாநிலத்தின் பெயரைச் சொல்லி குறிப்பிடுவதே சரியான நடைமுறை என அவர்கள் கூறுகின்றனர். அதேபோல், வெளிநாடுகளில் வசிப்பவர்களையும் குறிப்பிட்ட தேசத்தின் பெயரால் அழைப்பது வழக்கமாக உள்ளது என்பதையும் அவர்கள் நினைவூட்டுகின்றனர்.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற திசை அடிப்படையிலான பொதுப்பெயர்கள் பெரும்பாலும் பேசுவழக்கில் பயன்படுத்தப்பட்டாலும், அவை சில நேரங்களில் பொதுப்படுத்தலையும் தவறான புரிதல்களையும் உருவாக்கும் சூழல் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த வகையில்தான் பிற மாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், “மதராசி” என்று அழைக்கின்றனர். அது, நல்லதாக பார்க்கும்போது பிரச்னை இல்லை. எதாவது விரும்பத்தகாத விசயத்தில் பார்க்கும் போது விமர்சனத்திற்குரியதாக மாறிவிடுகிறது. தமிழர் ஒருவர் நல்லது செய்தால் மதராசி நல்லவர் என்று பேசுவார்கள். அது ஒட்டுமொத்த தமிழருக்கும் நல்ல பெயராக அமைகிறது. அதுவே மதராசி எதாவது தவறு செய்தால், அது குறித்த கெட்ட பெயர் அனைத்து மதராசிக்கும் வந்து சேரும். அதுபோலத்தான் பொத்தாம் பொதுவாக பகுதியை குறித்து சிலரை அழைத்தால் லாபத்தையும், நஷ்டத்தையும் அவர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டிய வரும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “நல்ல விஷயங்களில் பொதுப்பெயர்கள் பெரிதாக பிரச்சினையாக தெரியாமல் போகலாம். ஆனால் ஏதேனும் தவறு அல்லது குற்றச்செயல் தொடர்பான செய்திகளில் ‘வட மாநிலத்தவர்’ என பொதுவாக குறிப்பிடுவது, வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒரே பார்வையில் பார்க்கும் நிலையை உருவாக்குகிறது,” என்றனர்.
சமீப காலமாக, தமிழகத்தில் வெளியாவும் சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில், வடக்கிலிருந்து வந்தவர்களை குறித்து ‘வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற சொல்லாடல் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், அது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மாற்றாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர், பீகாரைச் சேர்ந்தவர், டெல்லியைச் சேர்ந்தவர், ஒடிசாவைச் சேர்ந்தவர், கொல்கத்தாவைச் சேர்ந்தவர், ஆந்திராவைச் சேர்ந்தவர் என குறிப்பிட்ட மாநிலத்தின் பெயரை பயன்படுத்தி செய்தி வெளியிடுவது, பொதுப்பார்வையை தவிர்க்க உதவும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது வடமாநிலத்தவர் என்று பொதுவாக அழைக்கும்போதுதான் அது நாளடைவில் வடக்கன் என்று மாறிவிடும்.
எனவே, இனி வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறித்து செய்தி வெளியிடும்போது பொதுப்பெயர்களை தவிர்த்து, குறிப்பிட்ட மாநிலத்தின் பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
இது சமூக ஒற்றுமையையும், பரஸ்பர மரியாதையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான ஊடக பொறுப்பாக பார்க்கப்படுகிறது.
nadunilai.com