மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த நாள் விழா - தமிழ்நாடு அரசின் சார்பில் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மரியாதை
Bharathi
மகாகவி பாரதியார் பாரதியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று(11.12.2023)தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மாpயாதை செலுத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, மகாகவி பாரதியார் எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னச்சாமிஐயருக்கும், இலட்சுமிஅம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பாரதியார் தமிழ்க்கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு நவீன தமிழ்க்கவிதைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். எட்டயபுரம் மன்னர் பாரதியாரின் 11 வயதில் அவரது கவிதை பாடும் ஆற்றலைப் பாராட்டி பாரதி என்ற பட்டத்தினை வழங்கினார். பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், விடுதலைப்போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கினார்.
பாரதியார் தனது கவிதைகள் மூலம் மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டினார். ஏராளமான கவிதைகள், உரைநடைநூல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதியார் சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கி அதில் வந்தே மாதரம் என்ற பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியா என்னும் வார இதழையும், பாலபாரதம் என்னும் ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தி இந்திய விடுதலைக்காக பாடுபட்டார். தன்னுடைய பத்திரிக்கைகளில் சுதந்திர முழக்கத்தை தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களைக்கொண்டு ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்துகொள்ளலாம். மேலும் பாரதியார் மணிமண்டபத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நூலகம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் இந்நூலகத்தை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தது நம் அனைவருக்கும் பெருமையாகும் என்று ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத்தலைவர் கதிர்வேல், எட்டயபுரம் வருவாய் ஆய்வாளர் கோமதி, எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி உறுப்பினர் ஜெயலட்சுமி மணிகண்டன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.