எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் சாதி ரீதியான இட ஒதுக்கீடு அவசியமில்லையே.!

election news

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் சாதி ரீதியான இட ஒதுக்கீடு அவசியமில்லையே.!

பூமியில் பிறந்து வளரும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிட தேவைகள் ஒரே மாதிரியாக பூர்த்தியாகும் போது பிரத்யேகமாக யாருக்கும் சலுகை செய்ய வேண்டிய அவசியம் வருவதில்லை. குறிப்பிட்ட பிரிவு மக்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்வதும், வேறு சில குறிப்பிட்ட பிரிவு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் இருந்த தடைகளை தகர்க்கும் வகையில்தான் இட ஒதுக்கீடு முறை இருந்து வருகிறது. இதன் மூலம் அனைத்து பிரிவு மக்களும் அனைத்து வசதி வாய்ப்புகளை பெறும் வாய்ப்பு இருந்து வருகிறது. இட ஒதுக்கீடுகள் சாதி மற்றும் மதத்தை மையமாக வைத்து வழங்கபடுகிறது. அவ்வாறு வழங்கும்போது குறிப்பிட்ட சாதி,மத பிரிவுகள் மக்களோடு வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். எனவேதான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும், பொருள்கள் அனைத்தும் அனைவருக்கும் பொது என்கிற சமத்துவ சிந்தனை மக்கள் மத்தியில் வளர்க்கப்பட வேண்டும் என்று சில இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அவ்வாறு அனைவரையும் நேசிக்கும் அன்பு இருந்தால் பகிர்ந்து அனுபவிக்கும் பண்பு வரும் என்று நம்புகிறார்கள். இப்படி மனதளவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும். உடனடியாக மாற்றம் வேண்டும் என்றால் சாதியை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்கும்படி செய்ய முடிகிறது. எனவேதான் இந்த முறையை பலரும் ஆதரிக்கின்றனர். 

இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் அனைத்து வகையான கல்வி, வேலைவாய்ப்பில் வாய்ப்பு வழங்கப்படும் நிலை வருமானால் அதற்கென்று தனியாக இட ஒதுக்கீடு அவசியமில்லாமல் போய்விடுகிறது. அப்படி செய்வது மிக கடினமாகும். அனைவரும் ஒரே மாதிரியான நியாய,தர்மங்களை கடைபிடிக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே அந்த முறை சாத்தியமாகும். அதுவரை தற்போதுள்ள நிலை சரிதான். 

இதற்கிடையே சமத்துவம் பேசும் அரசியல்வாதிகள், இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் அது இட ஒதுக்கீடு முறையை தூக்கிவிடும் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இது ஒரு தரப்பை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பிவிடும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. இப்போதை நிலையில் யாரும் இடஒதுக்கீடுக்கு எதிராக பேசவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆசையில் உள்ளவர்கள்தான் இப்படியெல்லாம் கதறுகின்றனர். 

நூறு சதவீத மக்களும் முழுமையாக பயனடைந்துவிடும் அளவிற்கு இன்னமும் தன்னிறைவு பெற்றுவிட வில்லை. அப்படியிருக்கும்போது இடஒதுக்கீட்டை எப்படி எடுப்பார்கள்?. அந்த அளவில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் பட்சத்தில் இடையில் சாதி என்கிற பிரிவு அவசியமில்லாமல் அழிந்து போய்விடும். சாதியை அழிக்க வேண்டும் என்று பேசும் சமத்துவ வாதிகள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பாடுபடவேண்டும். சாதியை வாழ வைத்து குறிப்பிட்ட அளவில் மக்கள் வாழவேண்டும் என்று நினைப்பது சரியானதாக பார்க்க முடியவில்லை.