குரும்பூர் -நாசரேத் இடையே மாற்று பாதை அமைக்காமல் பாலம் கட்டும்பணி தொடக்கம் - பொதுமக்கள் அவதி

Nazareth news

குரும்பூர் -நாசரேத் இடையே மாற்று பாதை அமைக்காமல் பாலம் கட்டும்பணி தொடக்கம் - பொதுமக்கள் அவதி

தூத்துக்குடியில் இருந்து நாசரேத், சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்ல பிரதான சாலையாக விளங்கி வருகிறது  குரும்பூர் - நாசரேத் இடையிலான சாலை. நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் தினசரி வந்து செல்கின்றனர். இதனால் இச்சாலை எப்போதும் பிசியாக இருப்பது வழக்கம். இந்த சாலையில் பழுது காரணமாக எதாவது ஒரு வாகனம் சிறிது நேரம் நின்றுவிட்டாலே போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கம். அப்படிப்பட்ட சாலையில் எதாவது ஒரு வேலை செய்வதாக இருந்தால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமாகும். நிலமை இப்படி இருக்கும் போது குரும்பூர் -நாசரேத் இடையே நெய்விளையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைக்காக பாலம் கட்டுவதை யாரும் தடுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. அதேவேளை அந்த பாலம் கட்டும் பணி என்பது கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை நடைபெறலாம் என்கிற போது அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது நெடுஞ்சாலைத்துறையின் கடமையாக இருக்கிறது.  ஆனால் அப்படியொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருப்பதாக தெரியவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து பொதுமக்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கூறும் பொதுமக்கள், வரும் காலங்களில் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் பண்டிகைகள் வரவுள்ளது.  நாசரேத் பகுதியை பொறுத்தவரையில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் பண்டிகை காலங்களில் துணி மற்றும் நகைகள் வாங்குவதற்காக வெளியூர் சென்று வருவார்கள். அதற்கு எந்த ஏற்பாடுகளும் செய்து கொடுக்காமல், முன்னறிவுப்பு எதுவும் கொடுக்காமல் பொது போக்குவரத்தை திடீரென தடுக்கும் வகையில் பாலம் கட்டும் பணியை தொடங்கியிருப்பது கண்டிக்கதக்கது என்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலம் கட்டும் பணி முடியும்வரையில் மாற்று வழித்தடங்களை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.