தூத்துக்குடி - மதுரை - பழனி - உடுமலை - பொள்ளாச்சி - கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை - மக்கள் மகிழ்ச்சி
Thoothukudi Train

தூத்துக்குடி - மேட்டுபாளையம் இடையிலான புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல். முருகன் வரும் 19ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்கிறார். இது தூத்துக்குடி பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தொழில் மாநகரங்களான தூத்துக்குடி - கோயம்புத்தூர் இடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சம்பந்தமாக நீண்டகால தொடர்பு இருந்து வருகிறது. அதிலும், தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோவை, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி,ஒட்டன்சத்திரம் இடையே தொழில் தொடர்பில் அதிகம் உள்ளனர். இவர்கள் பேருந்து மற்றும் கார்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி - கோவை இடையே இருந்து வந்த லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பயன்படுத்தி வந்தனர். கொரோனா பாதிப்பு காலத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் வெவ்வேறு ரயில் சேவைகள் தொடங்கி வருவதன் காரணமாக லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனடிப்படையில் தூத்துக்குடி - கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுன் நிறுத்தப்பட்டது. இந்நகரங்களுக்கிடையே ரயில் சேவை மீண்டும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்தியரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையே வரும் 19.07.2024 அன்று மேட்டுப்பாளையத்தில் வைத்து மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் முருகன் தொடங்கி வைக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தநிலையில் இன்று தூத்துக்குடியில் ரயில்வே நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி இரயில் நிலையத்தில் நடைபெற உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீன மயமாக்கள் பணிகள் குறித்தும், தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடியை கருந்தில் கொண்டு 4வது கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும், மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் நாளை மறுநாள் மேட்டுப்பாளையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ள மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான வாரம் இருமுறை இயக்கப்படும் புதிய இரயில் சேவைக்கான துவக்க விழா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், தூத்துக்குடி இரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான ஆர்.சித்ராங்கதன், ஸ்டேசன் மேனேஜர் ராஜ், இரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களான எஸ்.சிவராமன, வீர மணி, டாக்டர் கலைச்செல்வன், லதா, கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் உத்திரமுருகன், டிராபிக் மேனேஜர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேட்டுபாளையம் - கோயம்புத்தூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை - பழனி- ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - சாத்தூர் - கோவில்பட்டி - தூத்துக்குடி இடையில் இயக்கப்படும் இந்த ரயில், தூத்துக்குடியில் வியாழன், சனி கிழமைகளிலும், மேட்டுப்பாளையத்தில் வெள்ளி,ஞாயிற்றுகிழமைகளிலும் கிளம்ப கூடியதாகும். தூத்துக்குடியில் இரவு 10.50 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் முறையே, மதுரையில் அதிகாலை 1.15மணிக்கும், கோயம்புத்தூரில் 6.18 மணிக்கும் சென்று கிளம்பி மேட்டுபாளையத்தில் காலை 7.15 மணிக்கு நிறைவு செய்கிறது. மறுநாள் இரவு மேட்டுப்பாளையத்தில் இரவு 8.00 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், கோயம்புத்தூரில் 8.45 மணிக்கும், மதுரையில் அதிகாலை 1.20 மணிக்கும் சென்று கிளம்பி தூத்துக்குடியில் அதிகாலை 4.20 மணிக்கு நிறைவு செய்கிறது. தூத்துக்குடியில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த ரயில் 18 பெட்டிகளை கொண்டது.
மேட்டுபாளையம் மற்றும் தூத்துக்குடி இடையே கோயம்புத்தூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை - பழனி- ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - சாத்தூர் - கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும்.