விவசாயிகளின் பாரம்பரிய விதை உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை – மத்திய அமைச்சர் தெளிவுரை
Agri News
புது தில்லி, தை.03(17.01.2026)
விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் விதைகள் மசோதா, 2025 கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய விதைகளை வளர்க்கவும், வயலில் விதைக்கவும், பாதுகாக்கவும், விவசாயிகள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் எந்தத் தடையும் இல்லை என்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் விதைகள் மசோதா, 2025 முக்கிய இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டே இம்மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் பாரம்பரிய விதை செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சங்களால் அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது, திருத்தங்களுடன் மீண்டும் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்
வர்த்தக ரீதியாக விற்கப்படும் விதைகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். விதை உற்பத்தியாளர் யார் என்பதை அறிய பேக்கெட்டுகளில் QR கோடு இடம்பெற வேண்டும். தரச்சான்றிதழ் பெற்ற விதைகளே விற்பனைக்கு அனுமதி.போலி அல்லது தரமற்ற விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை. சட்டவிரோதமாக விதை உற்பத்தி/விற்பனை செய்தால் ரூ.30 லட்சம் வரை அபராதம், தொடர்ந்து தவறு செய்தால் சிறைத் தண்டனை.
விவசாயிகளின் அச்சங்களுக்கு விளக்கம்
மசோதா பாரம்பரிய விதை உரிமைகளை பாதிக்கும், விவசாயிகள் விதைகளை பரிமாறிக் கொள்ள தடை விதிக்கப்படும் என்ற கருத்துகள் பரவிய நிலையில், அமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
“இந்த சட்டம் விவசாயிகளுக்கும், பாரம்பரிய விதை ரகங்களுக்கும் பொருந்தாது. விவசாயிகள் தங்களது சொந்த விதைகளை வழக்கம்போல் வயலில் விதைக்கலாம்; ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
வர்த்தக நோக்கில் விதை விற்கும் நிறுவனங்களுக்காகவே இந்த கட்டுப்பாடுகள். போலி விதை விற்பனையாளர்களை கண்டறிந்து தண்டிக்கவே பதிவு, QR கோடு போன்ற விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன,” என அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த விமர்சனம்
விதையின் களப் பரிசோதனையை எங்கு செய்தாலும் அனுமதி அளிக்கும் அம்சம் வெளிநாட்டு விதை நிறுவனங்களுக்கு சாதகமாகவும், உள்ளூர் விவசாயிகளுக்கு பாதகமாகவும் அமையும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர், உள்ளூர் விவசாயிகளின் நலன் மற்றும் சந்தையில் தரநிலை உறுதி என்பதே மசோதாவின் மைய நோக்கம் என வலியுறுத்தினார்.
பொதுமக்கள் கருத்துகள்
வரைவு மசோதா தொடர்பாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்/கருத்துகள் மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்து தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கருத்து
விவசாயிகளுக்கு போதிய புரிதல் இல்லாததையும், சில தனியார் நிறுவனங்கள் அவர்களை தவறான வழிக்கு இழுத்துச் செல்வதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“விவசாயிகள் ஒருங்கிணைந்து சட்டத்தின் நன்மைகளை புரிந்து கொண்டு, தங்களுக்கான உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
முடிவாக, விதைகள் மசோதா, 2025 விவசாயிகளின் பாரம்பரிய விதை உரிமைகளை பாதிக்காமல், போலி விதை விற்பனை மற்றும் கொள்ளை லாபத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
nadunilai.com