ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஊட்டியில் முதல்முறையாக மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி

isha news

ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஊட்டியில் முதல்முறையாக மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி

ஈஷா அறக்கட்டளை, சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு ஆன்மிக மற்றும் சமூக நல அமைப்பாகும். கோயம்புத்தூரை அருகிலுள்ள ஈஷா யோகா மையம், யோகா, தியானம், உடல்–மனம்–சூழல் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ‘மண் காப்போம்’ இயக்கம், உலகளாவிய அளவில் மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, இயற்கை சமநிலையை பேணும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்து வருகிறது.

ஈஷா அறக்கட்டளையின் ‘மண் காப்போம்’ (Save Soil) இயக்கம் சார்பில், ஊட்டியில் முதல்முறையாக மலைக் காய்கறிகள் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் (20.12.2025) நடத்தப்பட்டது. ஊட்டி – ஹாப்பி ஃபாமிலி ஃபார்ம், ஃபாரஸ்ட் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம், மலைப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பயிற்சியில், முன்னோடி விவசாயிகளான தன்விஷ், சரவணன், கோபாலகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், பிரக்கோலி, பீன்ஸ், அவரை உள்ளிட்ட மலைக் காய்கறிகளின் நிலம் தயாரித்தல், விதைத் தேர்வு, சாகுபடி, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரை உள்ள முழுமையான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினர். இயற்கை முறையில் பூச்சி மேலாண்மை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில், மலைப்பகுதிகளில் விவசாயம் செய்யும்போது ஏற்படும் பூச்சித் தாக்குதல்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதிக செலவில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆமணக்கு, சூரியகாந்தி, லூபின் போன்ற பூச்சி தடுப்பு பயிர்களை வரப்போரங்களில் உயிர்வேலியாக அமைத்தால், பூச்சித் தாக்குதலை இயற்கையாகக் கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

மேலும், வரப்புகளில் ராகி, தினை, லெமன் கிராஸ் போன்ற பயிர்களை வளர்த்து கூடுதல் வருமானம் ஈட்டுவது, சர்க்கரைப் பாகு மற்றும் தேங்காய் உருண்டைகளை எலி பொறிகளில் பயன்படுத்தி எலித் தொல்லையை கட்டுப்படுத்துவது, பல அடுக்குப் பயிர் சாகுபடி மூலம் குறைந்த நிலப்பரப்பில் அதிக வருமானம் பெறுவது போன்ற நடைமுறை அனுபவங்களும் பகிரப்பட்டன. முன்னோடி விவசாயியின் அனுபவ பகிர்வு ஊட்டியில் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் மலைக் காய்கறிகள் சாகுபடி செய்து வெற்றி பெற்ற விவசாயி தன்விஷ், அவரை, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், களகோஸ், சோளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பயிர்களை சுழற்சி முறையில் வளர்க்கும் தனது பல அடுக்கு விவசாய அனுபவங்களை பகிர்ந்தார். பூச்சி மேலாண்மை, இயற்கை உர மேலாண்மை, அறுவடை, சந்தைப்படுத்துதல் வரை உள்ள நேரடி நடைமுறை அறிவையும் அவர் விவசாயிகளுக்கு விளக்கினார். அருகிலுள்ள நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் தங்களின் தோட்டங்களை பாதிக்காமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. 

ஒருங்கிணைப்பு மற்றும் பங்கேற்பு 

ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான சேகர் மற்றும் தில்லைஅரசன் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து, பயிற்சியை சிறப்பாக நடத்தினர். இந்தப் பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.