பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற வேண்டும் - மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை
isha news
ஓசூர் | 27.12.2025
“விவசாய நிலங்களில் விவசாயிகள் எதை வளர்த்தாலும் அது முழுமையாக அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள பிரிட்டிஷ் கால சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும்” என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரிடம் சத்குரு வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தார்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், “நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் – ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு” எனும் தலைப்பில் பிரம்மாண்ட விவசாய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கலந்து கொண்டு விவசாயிகளிடையே சிறப்புரையாற்றினார்.
மேலும், மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கருத்தரங்கில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
“55% விவசாயிகள் செழித்தால்தான் நாடு செழிக்கும்” – சத்குரு
கருத்தரங்கில் உரையாற்றிய சத்குரு, “இந்த நாடு செழிக்க வேண்டுமானால், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 55 சதவீத மக்கள் செழிக்க வேண்டும். மண்ணை நாம் ‘தாய் மண்’ என்று அழைக்கிறோம். அதை உணர்வுப்பூர்வமாக உணரும்போதுதான், மண்ணை மீட்டெடுக்க முயற்சி செய்வோம்” என்றார்.
மேலும், “விவசாய நிலங்களில் மரங்களும் விலங்குகளும் இல்லாமல் மண்ணைப் பாதுகாப்பது சாத்தியமில்லை. மரம் சார்ந்த விவசாயம் விவசாயிகளுக்கான ஒரு காப்பீடு. இது அவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்கும்” என தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கால சட்டங்களை கடுமையாக சுட்டிக்காட்டிய சத்குரு, “ஒரு விவசாயி தனது நிலத்தில் எதை வளர்த்தாலும் அது அவருக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். எட்டு அடிக்குக் கீழே உள்ள மண் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்ற பழைய சட்டம் மாற்றப்பட வேண்டும். நிலத்தில் தங்கம் கிடைத்தாலும் அரசு வரி விதிக்கலாமே தவிர, அதை பறிமுதல் செய்யக் கூடாது” என கூறினார்.
மேலும், “விவசாயத்தை தாராளமயமாக்குங்கள் என்று நான் சொல்லவில்லை. விவசாயத்தை விடுவியுங்கள் என்று கேட்கிறேன். விவசாய நிலத்தில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டவும், விற்கவும் அனுமதி தேவைப்படக் கூடாது. இது அரசுக் கொள்கையாக மாற வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், “ஓசூர் நகரம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் சங்கமிக்கும் திருவேணி சங்கமமாகத் திகழ்கிறது. சத்குரு அவர்களின் ஈடு இணையற்ற பணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார். “காவிரியை மீட்டெடுக்க முன்னெடுக்கப்பட்ட ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் இன்று ஒரு பேரியக்கமாக வளர்ந்துள்ளது. அவரது வழிகாட்டுதலின் கீழ் மரம் சார்ந்த விவசாயத்தை இந்திய அரசின் முக்கியக் கொள்கையாக முன்னெடுத்துச் செல்ல நான் உறுதிபூண்டுள்ளேன்” என தெரிவித்தார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் இதுவரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 12.8 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விஞ்ஞானிகள் – முன்னோடி விவசாயிகள் அனுபவப் பகிர்வு கருத்தரங்கில் ஐந்து தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் நான்கு மாநிலங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு,உயர்வருமானம் தரும் மரப்பயிர் தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் வெற்றிக் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் – முனைவர் ரவி சந்தன சாகுபடி – நடவு முதல் அறுவடை வரை இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் – முனைவர் கண்டியண்ணன் மிளகு சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் முறைகள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் – முனைவர் செந்தில் குமார், சங்கரன் அவகேடோ, மாம்பழம், சீத்தாப்பழம், கொய்யா சாகுபடி பூச்சியியல் வல்லுநர் செல்வம் – ரசாயனமில்லா பூச்சி மேலாண்மை சென்னை ஐஐடி – சிவசுப்பிரமணியன் – மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பம் ஏக்கருக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் – விவசாயிகள் அனுபவம்
முன்னோடி விவசாயிகள், மரங்களை அறுவடை செய்யாமல் வருமானம் ஈட்டும் முறைகள் ஜாதிக்காய் சாகுபடியில் ஒரு மரத்திற்கு ரூ.30,000 வருமானம் மிளகு சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.12 முதல் 30 லட்சம் வரை வருவாய் போன்ற வெற்றிமாதிரிகளை பகிர்ந்து கொண்டனர்.
விவசாய கண்காட்சி – 150க்கும் மேற்பட்ட அரங்குகள் கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற விவசாய கண்காட்சியில், மியாசகி மா, சந்தனம், மிளகு, அவகேடோ உள்ளிட்ட 54 வகையான பழமரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வேளாண் விளைப்பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நவீன வேளாண் கருவிகள் மற்றும் மரச்சாமான்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
nadunilai.com