தூத்துக்குடி அருகே வாழை, நெல் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - அரசு தலையிட்டு அப்புறப்படுத்த கோரிக்கை
news news
தூத்துக்குடி,ஜன.2:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட தெற்கு திரவியபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு தாமிரபரணி வடகால் குளத்திலிருந்து வரும் நீர் பாசனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் திரவியபுரம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக இந்த பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக நுழைந்து, வாழைத்தோட்டங்களை கடுமையாக சேதப்படுத்தி வருவது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் படை படையாக தோட்டங்களுக்குள் புகும் பன்றிகள், வாழை மரங்களின் அடிப்பகுதியை தின்று, மரங்களை முறித்து, முழுமையாக பயிர்களை அழித்து விடுகின்றன.
இதுகுறித்து தெற்கு திரவியபுரம் பகுதியில் வாழை பயிரிட்டுள்ள கூட்டாம்புளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ் கூறுகையில், “இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து வாழை மரங்களை முறித்து, குருத்தை தின்று விடுகின்றன. ஒரு தடவை வாழைத்தோட்டம் சேதமடைந்தால், அங்கு மீண்டும் வாழை கன்றுகளை நட்டாலும் அவை முறையாக வளர்வதில்லை. மனிதர்களோ, நாய்களோ நெருங்க முடியாத அளவிற்கு அவை மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன,”என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், பன்றிகளை விரட்டும் முயற்சியாக இரவு முழுவதும் காவல் காத்து, சத்தம் போடுவதும், டார்ச் லைட் அடிப்பதுமே தற்போது விவசாயிகளின் ஒரே பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது. ஆனால், இதனால் பன்றிகள் ஒரு தோட்டத்தை விட்டு மற்றொரு தோட்டத்திற்கு செல்வதே தவிர, முற்றிலும் பாதிப்பு தடுக்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
திரவியபுரம் கிராமத்திற்கு மிக அருகில் உள்ள தோட்டங்களில் கூட, நேற்று இரவு வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்தில் நாய்கள் இருந்தாலும், அவற்றை கண்டு காட்டுப்பன்றிகள் அஞ்சுவதில்லை என்றும், நாய்கள் சத்தம் போட்டால் அதனை கேட்டு சில சமயங்களில் பன்றிகள் ஓடுகின்றன என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த காட்டுப்பன்றிகள் தாக்குதலால், பகல் நேரங்களில்கூட விவசாயிகள் தனியாக வயல்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். ஏற்கனவே வேலைவாய்ப்பு காரணமாக பலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இந்த அச்சம் நீடித்தால் மீதமுள்ளவர்களும் வெளியேற நேரிடும் சூழல் உருவாகலாம் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, நீண்டகாலமாக இந்த பகுதியில் முகாமிட்டு இனப்பெருக்கம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை பிடித்து, பாதுகாப்பான வனப்பகுதிகளில் கொண்டு விடுவதற்கு அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
nadunilai.com