ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது
isha news
சென்னை,ஜனவரி 2:
ஈஷா யோகா மையத்தின் சார்பில், வரவிருக்கும் மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை சென்னையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொண்டை மண்டலப் பகுதிகளில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்கள் வழியாக இந்த ஆன்மிக ரத யாத்திரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு, இன்று (02.01.2026) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் அடியார்கள் கோபால், பாலாஜி மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்று, ரத யாத்திரையின் நோக்கம் மற்றும் பயண விபரங்களை விளக்கினர்.
மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களை அழைக்கும் நோக்கிலும், கோவைக்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாத பக்தர்கள், தங்களது ஊர்களிலேயே ஆதியோகி தரிசனம் பெறும் வகையிலும், இந்த ஆதியோகி ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆதீனங்களின் பங்களிப்புடன் நடைபெறும் ரத யாத்திரை
இந்த ஆண்டு, தென்கைலாய பக்திப் பேரவையுடன் இணைந்து, தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்கள் இந்த ரத யாத்திரையை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் ஆதியோகி ரதங்களை, சம்பந்தப்பட்ட ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தீப ஆரத்தி காட்டி தொடங்கி வைத்தனர்.
அந்த வகையில், வடக்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரை, கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தீப ஆரத்தி காட்டி தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் ஆதியோகி ரதம் சென்னை தாம்பரத்தை வந்தடைந்தது.
சென்னையில் ரத யாத்திரை செல்லும் பகுதிகள்
சென்னையில்,குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, நங்கநல்லூர், OMR, அடையார், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, மணலி, அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், பூந்தமல்லி, வளசரவாக்கம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில், வரும் ஜனவரி 8-ஆம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.
பாடல் பெற்ற திருத்தலங்களில் ரத யாத்திரை – விபரங்கள்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக, ஆதியோகி ரதம் பயணிக்கிறது. அதன் முக்கிய விபரங்கள்:
ஜனவரி 03: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
ஜனவரி 05: திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில்
ஜனவரி 06: வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
ஜனவரி 07: திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்
ஜனவரி 08: திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
இதனைத் தொடர்ந்து, ஆதியோகி ரதம் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்குச் செல்ல உள்ளது. மேலும், வடக்கு மண்டலத்தில் உள்ள இதர பாடல் பெற்ற தலங்களான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில், அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டிச்சேரி அருகே உள்ள இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில் வழியாகவும் ரத யாத்திரை நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை
முன்னதாக,மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில், தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
7 அடி உயர ஆதியோகி சிலையுடன் 4 ரதங்கள்
இந்த ஆதியோகி ரதங்கள், 7 அடி உயர ஆதியோகி திருவுருவச் சிலையுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணம் மேற்கொண்டு வருகின்றன.
மஹாசிவராத்திரி வரை நடைபெறும் இரண்டு மாத கால யாத்திரையில்,1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள்,250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக,சுமார் 30,000 கிலோமீட்டர் தூரம் இந்த ரதங்கள் பயணிக்க உள்ளன.
சிவ யாத்திரை – பாதயாத்திரையாக கோவைக்கு வருகை
இதனுடன் இணைந்து, ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையையும், சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் பயணிக்கின்றனர்.
மேலும், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய தேருடன், அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.
nadunilai.com