மஹாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் ஆதியோகி ரத யாத்திரை!

isha

மஹாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் மதுரை வந்தடைந்தது. இந்த ரதம் வரும் 26 - ஆம் தேதி வரை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வர உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு.தினேஷ்வர் பங்கேற்று கூறியதாவது: கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையிலிருந்து நான்கு ஆதியோகி ரதங்களுடன் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது. 

அங்கிருந்து புறப்பட்ட ஒரு ஆதியோகி ரதம் பல்வேறு ஊர்களை கடந்து, 21 ஆம் தேதி இரவு மதுரையை வந்தடைந்தது. இந்த ரதம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், திருமங்கலம், கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோவில், மாட்டுத் தாவணி, பிபி குளம், மாசி வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெறுவதற்கு  இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது. 

கோவையில் இருந்து புறப்பட்ட நான்கு ரதங்களும் ஒவ்வொரு  திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கி.மீ தூரம்  பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மதுரையிலும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் ஜான் கென்னடி மற்றும் சேகர் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.