ஸ்ரீவைகுண்டம் - கோவை அரசு பேருந்தில் முன்பதிவு திட்டத்தால் கிராமக்கள் அவதி - மாற்ற வேண்டும் என கோரிக்கை
Tnstc news
மாநகரங்களை இணைப்பதுடன், கிராமங்களை நகரங்களோடு இணைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இதன் மூலம் அன்றாடம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். கூடவே பெண்களுக்கு இலவச பேருந்து வசதியை கொடுத்து மேலும் பயன்பாட்டை அதிகப்படுத்தியிருக்கிறது தற்போதைய தமிழக அரசு. அதேவேளை, அரசு பேருந்து கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை, பேருந்து பற்றாக்குறை அதனால் வழித் தடத்தில் இயக்காமல் பேருந்துகளை நிறுத்துவது என்கிற குறைபாடுகளும் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அத்துடன் மாநகரங்களிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு இருப்பதுபோல் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாய நிலை கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால் கிராம புறங்களில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்கிறது.
அதாவது, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டெப்போவை சேர்ந்த பேருந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சாயர்புரம் - தூத்துக்குடி - மதுரை - தாராபுரம் வழியாக கோயம்புத்தூருக்கு (தடம் 603) இயக்கப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து காலை, மாலையில் இயக்கப்படும் இப்பேருந்துகள் சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி இடையிலான கிராம மக்களுக்கு பெரிதும் வசதியாக இருக்கிறது. இதில் இரவு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிளம்பும் பேருந்தில் தூத்துக்குடியில் இருந்து மதுரை - தாராபுரம் வழியாக கோவை செல்வதற்கு முன் பதிவு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவை செல்வதற்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஏறும் பயணிகளுக்கு நேரடியாக கோவைக்கான டிக்கெட் வழங்கப்படவில்லை. தூத்துக்குடி சென்று அங்கு முன்பதிவு நிலவரங்களை அறிந்த பிறகுதான் டிக்கெட் கிடைக்கிறது. சில நேரங்களில் ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் வழியோர பயணிகள் தூத்துக்குடியில் இறங்கி வேறு பேருந்தை தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்று பயணிகள் கொதிக்கிறார்கள்.
கிராம மக்களின் நலனுக்காக விடப்பட்ட பேருந்தை கிராம மக்கள் பயன்படுத்த முடியவில்லை. தூத்துக்குடியில் கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்வதற்கு பதிலாக கிராமத்தில் இருந்து வரும் பேருந்துகளை அதற்கு பயன்படுத்திவிடுகின்றனர் என்று தெரிகிறது. இதனால் வழியோர கிராம மக்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கதறுகின்றனர்.
எனவே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்தில் உள்ள முன் பதிவு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழியோரங்களில் உள்ளவர்களும் அவரவர் பகுதியில் இருந்து ஏறிக் கொள்ளும் வகையில் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.