அதிவேக ரேஸ் மாடல் பைக் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை T

Transport news

அதிவேக ரேஸ் மாடல் பைக் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை  T

உலக அரங்கில் இந்தியா தன்னுடைய கட்டமைப்பை வலிமை பொருந்தியதாக உருவாக்கி வருகிறது. சாலை, கப்பல், வான் வழி போக்குவரத்து வசதிகள் குறிப்பிட்ட அளவிற்கு மேம்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கல்வி, மருத்துவம், பொருளாதாரம், அடிப்படை தேவைகள் என அனைத்துக்கும் புது ரத்தங்கள் ஏற்றப்பட்டு வருகிறது. அபரிதமான வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா விளங்க உள்ளது என்று உலக நாடுகள் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். 

இதற்கிடையில் அமைக்கப்பட்டு வரும் கட்டமைப்புக்குள் ’விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒழுக்க குறைபாடு’ காரணமாக சாலை போக்குவரத்தில் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்கிற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிலும் சாலை விபத்துக்கள் தமிழகத்தில்தான் அதிகம் நடைபெறுகிறது என்கிற தகவல் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சாலை விபத்தில் இறப்போர் பெரும்பாலும் அதிவேக நவீன ரக மோட்டார் சைக்கிள்களை இயக்கிய இளைஞர்கள் என்கிற தகவலும் கூறப்படுகிறது. 

ரேஸில் அதிவேகமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ரக அதிவேக பைக்குகளை இளைஞர்கள் லட்சத்துக்கு மேல் பணத்தை கொடுத்து வாங்கி விரும்பி ஓட்டுகின்றனர். அவற்றை தகுதியான சாலையில் ஓட்டினால் பரவாயில்லை. சாதாரண சாலைகளிலும், கூட்ட நெரிசல்குள்ளும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அதிர்வை வெளிப்படுத்தி இயக்குகின்றனர். இது இளையர்களுக்கு ஜாலியை கொடுக்கலாம். ஆனால் இது சாமான்ய வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்கிறது. அதனால் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கிறது. 

கடந்த காலங்களில் வயதுக்கு மூத்தவர்கள் எச்சரித்தால் அதற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இளையவர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள காலச் சூழல், சினிமாக்களை பார்த்து, தொலைக்காட்சி, சமூக வலைதளங்களை பார்த்து யாரும், யார் பேச்சையும் கேட்பதில்லை. கிடத்தட்ட மூத்தவர்கள், இளையவர்களை பார்த்து அஞ்சி ஒதுங்கும் அளவிற்கு நிலைமை போயிருக்கிறது. மூத்தவரை மதிக்க வேண்டும் என்கிற பாடத்தை பள்ளிகளில் கூட பார்க்க முடியவில்லை. அதேவேளை இப்படிப்பட்ட இளைஞர்கள் மத்தியில் அமைதியான இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அனைத்து இளைஞர்களும் அப்படி அடங்க மறுத்தவர்கள்தான் என்று கூறிவிட முடியாது. அப்படி சரியான இளைய தலைமுறையை தக்க வைக்க வேண்டும், நல்ல இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை நூற்றுக்கு 90 சதவீதம்பேர் மத்தியில் எழுகிறது. தறிகெட்டு ஓடும் அதிவேக ரேஸ் மாடல் பைக் சப்ளையை ரத்து செய்துவிட்டு, குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பதை இறுக்கிபிடிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் சமநிலைக்கு கொண்டு வரமுடியும். 

எனவே மத்திய மாநில அரசுகள் அதிவேகம் கொண்ட ரேஸ் மாடல் பைக் விற்பனையை தடுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும். ஏற்கனவே இது போன்ற வாகன சட்டம் இருந்தால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மது, கஞ்சா என்று பல்வேறு போதையில் உருண்டு வரும் சில இளைஞர்கள், அதிவேக பைக்குகளையும் வைத்து சாமான்யர்களை மிரட்டி வருகிறார்கள் என்பதாகவே பார்க்க முடிகிறது. 

- ஆர்எஸ்.சரவணப்பெருமாள்