ரெடீமர்ஸ்" கோப்பைக்கான கபடி போட்டி - கரூர், ஈரோடு கல்லூரி அணிகள் முதலிடம் - மோகன் சி லாசரஸ் பரிசு வழங்கினார்
Nalumavadi News
குரும்பூர், ஜன.24- நாலுமாவடியில் நடந்த கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான "ரெடீமர்ஸ்" கோப்பைக்கான மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பிடித்த கரூர், ஈரோடு கல்லூரி அணிகளுக்கு மோகன் சி லாசரஸ் பரிசு வழங்கினார்.
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டு துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 8ம் ஆண்டு "ரெடீமர்ஸ்" கோப்பைக்கான கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான தமிழர் திருநாள் மின்னொளி கபடி போட்டி நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜன.22ம் தேதி துவங்கியது. 2 நாட்கள் நடந்த இந்த போட்டியில் 14 ஆண்கள் அணிகளும், 8 மகளிர் அணிகளும் கலந்து கொண்டன. முதல் நாள் போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
ஆண்களுக்கான இறுதி போட்டியில் கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி அணியும், கடலூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரி அணியும் மோதின. இதில் கரூர் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்று "ரெடீமர்ஸ்" கோப்பையை வென்றது. இதேபோல் பெண்களுக்கான இறுதி போட்டியில் ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் பிகேஆர் கல்லூரி அணியும், சேலம் சக்தி கைலாச கல்லூரி அணியும் மோதின. இதில் ஈரோடு பிகேஆர் கல்லூரி அணி வெற்றி பெற்று "ரெடீமர்ஸ்" கோப்பையை வென்றது.
ஆண்களுக்கான போட்டியில் 2ம் இடத்தை கடலூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரி அணியும், 3ம் இடத்தை சென்னை புது கல்லூரியும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் 2ம் இடத்தை சேலம் சக்தி கைலாச கல்லூரி அணியும், 3ம் இடத்தை கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி அணியும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணியும் பிடித்தது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு "ரெடீமர்ஸ்" கோப்பை மற்றும் பரிசுத்தொகையாக தலா ரூ.50 ஆயிரத்தை வழங்கினார். தொடர்ந்து 2ம் இடம் பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையாக தலா ரூ.30 ஆயிரமும், 3ம் இடம் பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையாக தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. 6 சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கவுதமன், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரியுஸ், காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமையாசிரியர் திருநீலகண்டன், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய், குரும்பூர் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் அர்ச்சுனா விருது மணத்தி கணேசன், மணத்தி எட்வின், பிஆர்ஓ சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
nadunilai.com