தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் மாநிலத்திற்கே சமக்ரா சிக் ஷா திட்ட நிதி - சரியான முடிவுதான்
NEP NEWS
பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய பாரத தேசம், கலாசாரம், பண்பாடுகளில் ஒற்றுபட்டு வலிமையான தேசமாக விளங்கி வருகிறது. அதன் இணைப்பை மேலும் வலிமைபடுத்தவும், தக்கவைக்கவும் கல்வி, பொருளாதார கட்டமைப்பை தேசிய அளவில் வகைப்படுத்தும் முயற்சியில் மத்தியரசுகள் எப்போதும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. அதனடிப்படையில்தான் தேசிய கல்வி கொள்கை - 2024 ம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியிருக்கின்றன. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் இன்னும் பின்பற்றவில்லை. தேசிய கல்வி கொள்கையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இவர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள். ஆனால் தேசிய கல்வி கொள்கை ஏற்கனவே சபை மூலம் ஏற்கப்பட்டதுதான். அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதே சபைதான் முடிவு செய்ய வேண்டும். இனிமேல் அது முடியாத காரியம்தான்.
இந்தநிலையில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில், மத்தியரசிடம் இருந்து, தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதத்தில் வரவேண்டிய 573 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. ஒரு மாதத்திற்கு முன், தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி,பார்லிமெண்ட் குழு தலைவர் கனிமொழி எம்.பி தலைமையில் எம்.பிக்கள், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தோம். பல லட்சம் குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில், விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்து, அரசியல் செய்யக் கூடாது என நேரடியாகவே வலியுறுத்தினோம் பார்லிமெண்ட் கூட்டத்தொடர் முடிந்தும் அந்த நிதி வரவில்லை. ஜூன் மாதத்துக்கான 573 கோடி ரூபாய் மட்டுமல்ல, கடந்த ஆண்டு வரவேண்டிய கடைசி தவணை தொகை 249 கோடி ரூபாயையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான், நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது போல் செயல்படுகின்றனர். கடந்த 2020-ல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், 2018ம் ஆண்டுக்கு முன்பிருந்த நடைமுறைய்ல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறுவது நியாயமல்ல. வரும் 2030ம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சியில் இலக்கை அடைய, இப்போதே தமிழகத்தை ஊக்கப்படுத்தி, கூடுதலான நிதி ஒதுக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை,விவாதம் சார்ந்த விவகாரம். அதை காரணம் காட்டி, மாணவர்களின் கல்விக்கான பங்களிப்பு நிதியை நிறுத்தி வைக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.
ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறது என்றால், அப்படிபட்ட ஒருங்கிணைந்த கல்விக்கான நிதிதானே அது. அக்கல்வியை ஏற்கமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் அதுக்கான நிதியை மட்டும் எப்படி கேட்க முடியும்?. தேசிய அளவிலான கல்வியை ஏற்காத போது அந்த நிதிக்கு எப்படி உரிமை கொண்டாடமுடியும் என்பது சாதாரண சாமான்ய மக்களின் கேள்வியாக இருக்கிறது. எனவே கல்விக்கு மத்தியரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றால் அக்கல்வியை மாநில அரசு ஏற்க வேண்டும். ஏற்காத கல்விக்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்க முடியும் என்பது நியாயமான கேள்வியாகத்தான் இருக்கிறது.