திருச்செந்தூரில் கடலரிப்பு : டிரோன் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு - கடல் நீரோட்டம் குறித்து பதிவு
Thiruchendur Murugan

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கடற்கரையில் ஏற்பட்ட கடலரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் நேற்று 2 வது நாளாக டிரோன் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை கடந்த சில மாத காலமாக கடல் சீற்றம் அதிகரித்து கடலரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி தூரத்திற்கும் 8 அடி ஆழத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கத்தை விட கடல் நீரும் சுமார் 50 அடி தூரத்திற்கு வெளியே வந்துள்ளது. அந்த இடத்தில் பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால் பக்தர்கள் கோயில் முன் உள்ள கடற்கரை படிக்கட்டு பகுதியிலிருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை உள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இறங்காதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கடலரிப்பு குறித்து ஜஜடி மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் சார்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதனை தொடர்ந்து இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர்கள் நேற்று முன்தினம் கோயில் கடற்கரை முன்பிருந்து அமலிநகர் கடற்கரை வரை கடலோரப் பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் டிரோன் உதவியுடனும், ஆர்.டி.கே ஜி.பி எஸ் கருவிகள் மூலம் திருச்செந்தூர் கோயில், வீரபாண்டியன் பட்டினம், அமலிநகர் போன்ற கடற்கரை, கடல் பகுதியில் நில அமைப்பு குறித்தும்,மேடு, பள்ளம் ஆகியவற்றை ஆய்வு மேற் கொண்டனர். டிரோன் உதவியுடன் 500 மீட்டர் சுற்றளவுக்கு வான் வழியாக கடல்தன்மை, ஆழம், கடல் நீரோட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்தனர்.
இந்த ஆய்வறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படும் என அந்த குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.