காதலின் பெயரில் ஏமாற்றம் – மோனிகா எனும் இளம் பெண்ணின் உருக்கமான மனவலி !

London news

காதலின் பெயரில் ஏமாற்றம் – மோனிகா எனும் இளம் பெண்ணின் உருக்கமான மனவலி !

லண்டன்:

2021 ஆம் ஆண்டு உயர் கல்விக்காக இந்தியாவின் தெலுங்கு நாட்டில் இருந்து லண்டனுக்கு சென்ற மோனிகா என்பவர், அங்கு ராஜசேகர் ரவிச்சந்திரன் என்பவரை சந்தித்துள்ளார். காதலாக வளர்ந்த அந்த உறவு, திருமண வாக்குறுதிகளும் குடும்ப அங்கீகாரத்துடனும் தொடர்ந்ததாக மோனிகா கூறுகிறார். அவரது தாயாரையும் ராஜசேகரின் குடும்பம் வாழ்த்தியதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு வருமாறு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2022 ஏப்ரல் 6ஆம் தேதி இருவரும் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் லண்டனில் திருமண பதிவு செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் மோனிகா கர்ப்பமாகியதையும், ஆனால் ராஜசேகர் திருமண பதிவு தேதி ரத்து செய்ததோடு, “நிதி பிரச்னை” காரணமாக குழந்தையை கலைக்க வலியுறுத்தியதாகவும் கூறுகிறார்.

“அவர் சொன்னது – இந்தியா போய் திருமணம் செய்வோம், குழந்தையை இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிளான் பண்ணலாம். நானும் நம்பினேன். ஆனால் என் குழந்தையை இழந்தது என் உயிரையே பறித்தது” என்கிறார் மோனிகா.

கருக்கலைப்புக்குப் பிறகு ராஜசேகரின் நடத்தை முற்றிலும் மாறியதாகவும், அவரின் குடும்பத்தினர் தொடர்பை முற்றாக துண்டித்ததாகவும் கூறுகிறார். அவரை இந்தியாவுக்கு அனுப்பிவைத்து, பின்னர் அனைத்துப் தொடர்புகளையும் துண்டித்து மறைந்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்.

தொடர்ந்த ஏமாற்றம்:

2023 இல் இந்தியாவில் இருக்கும் போது, ராஜசேகர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டிருப்பது குறித்து தகவல் கிடைத்தது. விசாரிக்கும்போது, “அது என் குடும்பத்தின் அழுத்தத்தில் நடந்த திருமணம் – அது சட்டப்படி செல்லாது, நானே முடிக்க போகிறேன்” என ராஜசேகர் கூறியதாக மோனிகா தெரிவித்தார்.

மேலும், திருமணத்தை முடித்து, தன்னை முறையாக திருமணம் செய்யப்போகிறேன் என கூறி, மோனிகாவிடம் ரூ.1,90,000 பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் மறுபடியும் தொடர்பை துண்டித்து துபாய்க்கு புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

“நான் பெற்றதை எல்லாம் இழந்துவிட்டேன் – என் குழந்தையை, என் நம்பிக்கையை, என் வாழ்கையை. எனது பெற்றோர் என் பின்னால் நிற்க முடியாத நிலையில், போலீசிடம் புகார் அளிக்கவும் தயங்கியுள்ளேன். ஆனால் இப்போது எனக்கு நீதியே வேண்டும். ராஜசேகர் ரவிச்சந்திரன் என்னை சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும். என் குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” என உருக்கமாகக் கூறுகிறார் மோனிகா.

உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆதாரங்கள்:

மோனிகா தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்கள், திருமண பதிவு நேர்காணல் ஏற்பாடு செய்த அதிகாரியின் தகவல்கள், வாட்ஸ்அப் விவரங்கள், பண பரிமாற்ற ஆதாரங்கள் என அனைத்தையும் ஊடகங்களிடம் வழங்கியுள்ளார்.

மறைமுக திருமணத்தின் பெயரில் ஏமாற்றும் நிகழ்வுகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக UA நியூஸ் போன்ற ஊடகங்கள் இந்தச் செய்தியை எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறார் மோனிகா.