நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டிகள் துவக்கம்.!

Nazareth news

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டிகள் துவக்கம்.!

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படுகின்ற  மாவட்ட அளவிலான மாணவர் மற்றும் மாணவியர் கால்பந்து போட்டிகள் துவங்கியது. 

இந்த போட்டிகள்15,16,17 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. முதல் நாள் போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார்.  இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் முன்னிலை வகித்தார். போட்டிகளில் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து  மொத்தமாக  48 பள்ளிகளைச் சார்ந்த அணிகள் மோதுகின்றன. 14 வயது 17 வயது மற்றும் 19 வயது பிரிவில் பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு  பள்ளிகளைச் சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றுகின்றனர். 

நாசரேத் புனித லூக்கா  நர்சிங் கல்லூரியைச் சார்ந்த செவிலியர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகள் முதல் உதவிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரணர் இயக்க மாணவர்கள் தன்னார்வல தொண்டர்களாக செயல்படுகின்றனர். மாவட்ட கால்பந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சுதாகர் தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி, மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், பிற  ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.