தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியபிராட்டிகுளக்கரையில் மட்டுமே உடைப்பு ஏற்பட்டது - கலெக்டர் இளம்பகவத் தகவல்

Thoothukidi collector

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியபிராட்டிகுளக்கரையில் மட்டுமே உடைப்பு ஏற்பட்டது - கலெக்டர் இளம்பகவத் தகவல்

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியபிராட்டி குளக்கரையில் மட்டுமே உடைப்பு ஏற்பட்டது என்றும், மொத்ததில் 225 வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் கலெக்டர் இளம்பகவத் மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13, 14 ஆகிய தினங்கள் பெய்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. பல இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் எல்லாம் வடிந்துள்ளது. 14ம் தேதி இரவு நிலவரப்படி மாவட்டத்தில் 474 இடங்களில் தண்ணீர் தேங்கிஇருந்தது.நேற்றையதினம் 292 இடங்களாக இருந்தது, இன்றையதினம் 100 இடங்களுக்கும் கீழ்குறைவாகவே உள்ளது. தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரின் 16, 17, 18 வார்டுகள் கடல் மட்டத்தை விட குறைவாக உள்ளதால் அங்கு தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவது சவாலாக  உள்ளது. தற்போது, பக்கிள் ஓடையில் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை நீரின் வேகம் மாறுபடுகிறது. இந்த ஓடையில் நீரின் மட்டமும் குறைந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி சீராக நடைபெற்று வருகிறது.

மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால், 8 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஏரல் தரைப்பாலம் தவிர மற்ற பாலங்களில் போக்குவரத்து சீரானது. அந்த பாலத்தையும் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கயத்தாறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரும் அகற்றப்பட்டு போக்குவரத்துசீரமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் அவை சீரமைக்கப்படும். ஆத்தூர் பாலத்தில் உள்ள ஒரு தூணில் ஏற்பட்ட வளைவு சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்திலுள்ள மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைந்துள்ளது. மேலும் கோரம்பள்ளம் குளத்தின் மதகுகள் மூடப்பட்டு விவசாய தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த மழை வெள்ளத்தால், மாவட்டம் முழுவதும் 212 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும், 8 வீடுகள் லேசாகவும் என மொத்தம் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு மாடு, 41 ஆடுகள், கோழிப்பண்ணையில் உள்ள 10 ஆயிரம் கோழிகள் ஆகியவை இறந்துள்ளன. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சியில் உள்ள  பெரியபிராட்டிகுளக்கரையில் மட்டுமே உடைப்பு ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குளங்கள் 95 சதவீதமும். 80க்கும் மேற்பட்ட குளங்கள் முழுவதுமாகவும் நிரம்பியுள்ளன. மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள பாசனக் குளங்கள் அனைத்தும் 95 சதவீதம் நிரம்பியுள்ளன. கால்வாய் பாசனம் இல்லாத 180 குளங்கள் 50 முதல் 60 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

மாவட்டத்தில் தற்போது வரை சராசரியாக 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 120 மி.மீ. குறைவாகும். பயிர்கள் சேதம் குறித்து தற்போது கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முழுவதுமாக நிறைவு பெற்றபின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டியின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.