பூட்டானின் தேசிய தின விழாவில் மன்னரின் அரச விருந்தினராக சத்குரு பங்கேற்பு!
isha news
பூட்டானின் 177-வது தேசிய தின விழா கொண்டாட்டம் இன்று 17/12/2024 அந்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக கலந்து கொண்டார்.
இது குறித்து சத்குரு பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “அழகிய பூட்டான், உங்கள் தேசிய தினத்தில் இங்கு இருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமும் கௌரவமும் ஆகும். மாண்புமிகு அரசர், அரச குடும்பத்தினர் மற்றும் பூட்டானின் அற்புதமான குடிமக்கள் அனைவரது உபசரிப்பும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது. எண்களோடு போட்டியிடுவதற்கு மேல் தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரும் நாடு, மனிதகுலம் முழுவதற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அழகிய பூட்டான் நாட்டிற்கும் அதன் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனக் கூறியுள்ளார்.
பூட்டானின் தேசிய விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் அரச விருந்து ஆகியவற்றிலும் சத்குரு கலந்து கொள்ள உள்ளார்.
பூட்டானின் முதல் மன்னர் கோங்சார் உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழா 1907-இல் நடைபெற்றது. இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் தேதி பூட்டானில் தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெறும்.
இந்தியாவும் பூடானும் கலாச்சாரம் , பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகளில் நீண்ட கால நட்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன. அரச விருந்தினராக சத்குரு அழைக்கப்பட்டு இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்பை காட்டுகிறது.