திருச்செந்தூர் அருகே அண்ணன், தம்பி கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் 4 பேருக்கு ஆயுள் - தூத்துக்குடி கோர்ட்
Murder News
திருச்செந்தூர் அருகே அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து(65). இவர் அங்குள்ள கோவிலில் நிர்வாகியாக இருந்திருக்கிறார். அதோடு அப்பகுதியில் ஒரு சலூன் கடை தொடங்க முயற்சியெடுத்து வந்திருக்கிறார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன்(45) எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்தநிலையில் கடந்த 2012ம் ஆண்டு முத்துவை, கேசவன் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதன் பிறகு இவர்களுக்கிடையே மோதல் முற்றியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு கேசவன் தலைமையிலான ஒரு கும்பல் முத்துவின் மகன் வேல்குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து முத்துவின் இன்னொரு மகன் சரவணன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். வேல்குமார் கொலை வழக்கில் சரவணன் சாட்சி சொல்ல இருந்தார். அதனால் அவரையும் கேசவன் தரப்பினர் கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12.07.2022 அன்று அம்மன்புரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்த சரவணனை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவன்(45), ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த திருப்பதிபாண்டியன் மகன் முத்துசெல்வம்(25), பழையகாயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள்(27), முத்துசாமி மகன் முத்துராஜா(28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட கேசவன், முத்துசெல்வம், சிவபெருமாள், முத்துராஜா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானார்.