அனைவரும் மற்றவர்களையும் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் - மாவட்ட கலெக்டர் வலியுறுத்தல்
Thoothukudi collector
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 14வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தலைமையில் இன்று (25.01.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அனைவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் பேசியதாவது : இந்திய தேர்தல் ஆணையம் தான் நிறுவப்பட்ட ஜனவரி 25 1950 தேதியினை நினைவு கூறும் வகையில், தேசிய வாக்காளர் தினமாக, கடந்த ஜனவரி 25ம் தேதி 2011 ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. மக்களாட்சியின் மாண்பினையும், நடுநிலையான மற்றும் அமைதியான தேர்தல்களை நடத்திடவும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் நேர்மையுடன் வாக்களிக்கும் வகையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் இவ்விழாவினை இந்திய தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வாக்காளராக பதிவு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் 14வது தேசிய வாக்காளர் தின விழா குறிக்கோளான ”வாக்களிப்பது போல் எதுவுமில்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்” ("Nothing like voting, I vote for sure)என்பதை விளம்பரப்படுத்திடும் நோக்கில் கொண்டாடப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட தேசிய வாக்காளர் தின பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில், தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் சுய உதவி குழுவினர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட விளம்பர தூதர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தில் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய முக்கியமான உரிமைதான் வாக்குரிமை. எந்தவொரு பாகுபாடும், வித்யாசமும் இல்லாமல் அனைவரின் வாக்கும் முக்கியமானது. வாக்காளர் தினம் நமது கடமையை நினைவுப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. மேலும், விளம்பர தூதர்கள் நியமிக்கப்பட்டு புதிய வாக்காளர்களிடம் கல்லூரிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நம்மை ஆட்சி செய்யக்கூடிய அரசை தீர்மானிக்கக்கூடியது. அதற்கான உரிமை உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. நீங்கள் அனைவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) செந்தில்வேல்முருகன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, வருவாய் ஆய்வாளர் (தேர்தல்) ராமச்சந்திரன், மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார தூதர்கள் ஏ.தேவராஜ், தனேஷ் கனகராஜ், செல்வி.ஸ்ருதி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.