திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா - அக். 2 முதல் 8 ம் தேதி வரை நடக்கிறது

Thiruchendur Murugan

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா - அக். 2 முதல் 8 ம் தேதி வரை நடக்கிறது

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2 முதல் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் ஆலோசனை நடத்தினார். 

அப்போது, அவர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் வகையில் தயார்நிலை செய்யப்பட்டுள்ளதா என்பதையும், தற்காலிகப் பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு அதிக அளவில் காவல்துறையினர்களை பணியமர்த்தி போக்குவரத்தினை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவசர கால நேர்வுகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவிழாவின் இறுதிநாளில் திரும்ப வரும் வாகனங்கள் நெரிசலின்றி வெளியே செல்ல தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். ஆட்டோ மற்றும் திறந்த வெளி வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்வதை தடை செய்து முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் பேருந்துகள் நின்று செல்லும் இடங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்கவேண்டும்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி சுகாதாரமான முறையில் விநியோகம் செய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க மின் வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குப்பைகள் டிராக்டர் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த திருச்செந்தூர் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடற்கரைப்பகுதியில் தேவையான ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைத்திருக்கவும், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படவும் வேண்டும். பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மருத்துவப்பணியாளர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பெற்று சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

காவல் துறையினருக்கு கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் உரிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துக் கொடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு மற்றும் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர், கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். போதுமான அளவிற்கு நகரும் கழிவறைகள் அமைத்திட கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலங்களில் அனைத்து பணிகளையும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்திட வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எடிசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உள்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.