தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் பஸ் சர்வீஸ் துவக்கம் - பயணிகள் கோரிக்கை
thoothukudi smart city bus satand
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று(11.10.2023) அதிகாலை முதல் பஸ் சர்வீஸ் துவங்கியுள்ளது. இதனை வரவேற்கும் பொதுமக்கள் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் வரிசையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி மதிப்பில் பேருந்து நிலையம கட்டப்பட்டுள்ளது. அதாவது, அண்ணா பேருந்து நிலையம் என்றிருந்த பழைய பேருந்து நிலையத்தை புதுப்பித்திருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து இப்போது திறக்கப்பட்டுள்ளது. மேயர் ஜெகன் பெரியசாமி தொடர் கவனிப்பில் இருந்து விரைவில் முடிக்க துண்டுகோளாக இருந்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், எம்.பி., கனிமொழி ஆகியோர் முன்னிலையில் கடந்த 8ம் தேதி பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் பஸ் சர்வீஸ் தொடங்கியுள்ளது. நவீன யுக்தியுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் பஸ் போக்குவரத்துடன், கடைகள், வாகன நிறுத்துமிடம் என்று பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவைகுண்டம் வழித்தடங்கள் மற்றும் நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. 1) புதிய துறைமுகம், 2) புதிய துறைமுகம் (கேம்ப்-1), 3)அனல்மின்நிலையம்(கேம்ப்-2), 4) ஆறுமுகமங்கலம்(கோவங்காடு), 5) குரும்பூர்(ஆத்தூர் மார்க்கம்), 6) முக்காணி(ஏரல்), 7) ஏரல்(சாயர்புரம் மார்க்கம்), 8) மேலச்செக்காரக்குடி, 9) செக்காரக்குடி, 10) வடக்கு சிலுக்கன்பட்டி / பேரூரணி, 11) சொக்கலிங்கபுரம்(தட்டப்பாறை மார்க்கம்), 12) திருநெல்வேலி, 13) திருநெல்வேலி, 14) திருநெல்வேலி, 15) திருநெல்வேலி, 16) புதியம்புத்தூர்(தட்டப்பாறை மார்க்கம்), 17) கீழவைப்பார், 18) குளத்தூர் / சுப்பிரமணியபுரம், 19) கீழமுடிமன்(புதியம்புத்தூர் வழி), 20) வெள்ளாரம் / கவர்னகிரி, 21) ஒட்டப்பிடாரம்(குறுக்குச்சாலை மார்க்கம்), 22) பசுவந்தனை, 23) சாத்தான்குளம், 24) நாசரேத், 25) திருவைகுண்டம்(சாயர்புரம் மார்க்கம்), 26) திருவைகுண்டம்(வாகைகுளம் மார்க்கம்), 27) திருச்செந்தூர், 28) திருச்செந்தூர், 29) குலசை என்று 29 பேருந்து நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதனை வரவேற்கும் அதேவேளையில், ஒரே மார்க்க பேருந்துகள் வெவ்வேறு இடத்தில் இருந்து இயக்கப்படும்போது பயணிகளை அங்கும் இங்கும் ஓட வைக்கும் நிலை ஏற்படும். உதாரணமாக, 7வது பேருந்து நிறுத்தத்தில் சாயர்புரம் வழியாக ஏரலுக்கும், 25வது பேருந்து நிறுத்ததில் சாயர்புரம் வழியாக திருவைகுண்டத்திற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நாகர்கோவிலுக்கு திருச்செந்தூர் வழியாகவும், திருநெல்வேலி வழியாகவும் செல்லமுடியும். அப்படி இருக்கும் போது திருநெல்வேலிக்கு 12, 13,14,15 வது இடங்களும், திருச்செந்தூருக்கு 27 மற்றும் 28வது இடங்களும் ஒதுக்கப்பட்டிருப்பது பயணிகளை அங்குமிங்கும் ஓடச் செய்யும். சாயர்புரம் வழியாக திருவைகுண்டம் 25வது இடமும், வாகைகுளம் வழியாக திருவைகுண்டம் 26வது இடமும் கொடுத்திருப்பது வரவேற்கவேண்டிய விசயம். அதேவேளை சாயர்புரம் மார்க்கம் பேருந்துகள் 7வது நிறுத்தத்திலும் நிற்கும், 25வது நிறுத்தத்திலும் நிற்கும் என்கிற போது பயணிகள் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறும் நிலை ஏற்படும். தூரத்து பேருந்தாக இருந்தாலும் அது வழியோர ஊர் மக்களையும் ஏற்றி சென்றால்தான் பொருளாதார ரீதியாக அதற்கு சரியாக இருக்கும்.
அதாவது திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி மக்கள் ஏறுவார்கள் என்கிற போது திருச்செந்தூருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிறுத்தம் அருகில் முக்காணி நிறுத்தம் இருப்பதே சரி. அதுபோல் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் புதுக்கோட்டை,வாகைகுளம் செல்லும் மக்கள் ஏறுவார்கள் என்கிற போது திருநெல்வேலி நிறுத்தம் அருகில்தான் வாகைகுளம் வழியாக செல்லும் திருவைகுண்டம் பஸ் நிறுத்தமும் இருக்க வேண்டும். அதேபோல் சாயர்புரம் வழியாக ஏரல், சாயர்புரம் வழியாக திருவைகுண்டம் செல்லும் பேருந்துகள் அருகருகே இருப்பதே நல்லது.
அதாவது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து திருவைகுண்டம் செல்லும் பேருந்துகள் என்று பிரித்து அதன் இடைவெளியில் உள்ள ஊர் சார்ந்த பஸ் நிறுத்தங்களை இதன் அருகருகே வைப்பதே நல்லது. மாறாக நகர பேருந்துகள் அனைத்தும் ஒரு புறம் என்றும் மற்ற பேருந்துகள் அனைத்தும் மற்ற பகுதிகளில் என்றும் மாற்ற வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். மேற்கூறும் வசதிகளுக்கு இந்த முறை உகந்ததாக இருக்காது. அப்போது ஒரே மார்க்க பேருந்துகள் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நிலை ஏற்படும்.
எனவே தற்போதுள்ள வரிசைப்படுத்தலில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். அதாவது முதலில், 1) மாநகர பேருந்துகள், 2) புதிய துறைமுகம், புதியதுறைமுகம்(கேம்ப்-1), 3)அனல்மின்நிலையம்(கேம்ப்-2), 4) ஆறுமுகமங்கலம்(கோவங்காடு), 5)திருச்செந்தூர், 6) திருச்செந்தூர், 7) குலசை, 8)சாத்தான்குளம், 9) நாசரேத், 10) குரும்பூர், 11) முக்காணி(ஏரல்), 12) ஏரல்(சாயர்புரம் மார்க்கம்), 13) திருவைகுண்டம்(சாயர்புரம் மார்க்கம்),14)திருவைகுண்டம்(வாகைகுளம் மார்க்கம்), 15)திருநெல்வேலி, 16)திருநெல்வேலி,17)திருநெல்வேலி,18)திருநெல்வேலி,19)மேலச் செக்காரக்குடி, 20) செக்காரக்குடி, 21) வடக்கு சிலுக்கன்பட்டி/பேரூரணி, 22) சொக்கலிங்கபுரம்(தட்டப்பாறை மார்க்கம்), 23) புதியம்புத்தூர் (தட்டப்பாறை மார்க்கம்), 24) கீழ முடிமன்(புதியம்புத்தூர் வழி), 25) வெள்ளாரம்/கவர்னகிரி, 26) ஓட்டப்பிடாரம்(குறுக்குச்சாலை மார்க்கம்), 27) பசுவந்தனை, 28) கீழவைப்பார், 29) குளத்தூர் / சுப்பிரமணியபுரம் என்கிற வரிசைப்படி பேருந்துகள் நிறுத்தங்களை அமைத்தால் சரியாக இருக்கும் என்று பயணிகள் நம்புகிறார்கள்.
எனவே மாநகராட்சி மேயர், ஆணையர், போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து ஆலோசனை செய்து தற்போதுள்ள பஸ் நிறுத்த வரிசைப்படுத்தலை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
-ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், நடுநிலை.காம்