தமிழகம் திவால் - வெள்ளை அறிக்கை வெளியிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
BJP News
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மாநில நிதி நிர்வாகம் குறித்து அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகத்தின் நிதிநிலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழக நிதிநிலை தொடர்பாக பாஜக தயாரித்துள்ள “வெள்ளை அறிக்கை” வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அறிக்கையை பியூஷ் கோயல் வெளியிட, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மாநிலம் திவால் நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. மாநில அரசின் வருவாய் பயன்படுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் எங்கு செல்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும்.
ரூ.12 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாக அரசு கூறினாலும், அதற்கான நிலையான வேலைவாய்ப்புகள் எங்கே என்பது தெளிவாக இல்லை. கடந்த சில ஆண்டுகளில் சுமார் 50,000 சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டதால், 5 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நிர்வாக குறைபாடுகள் காரணமாக தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்ததுடன், கடன் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.76 ஆயிரம் கோடி வட்டி செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு நிதி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
அரசு கஜானா ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்தப்படுகிறது. மதுவிற்பனை மற்றும் அரசு ஒப்பந்தங்களில் கமிஷன் நடைமுறைகள் உள்ளன. டி.ஆர். பாலு, ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் அரசியல் காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஒற்றைக் குடும்ப ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, மாநிலத்தின் கடன் நிலை, முதலீடுகள், வேலைவாய்ப்பு போன்ற பொருளாதார அம்சங்கள் முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளன.
இந்த நிலையில், பாஜக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையும், மத்திய அமைச்சரின் இந்த கருத்துகளும் தமிழக அரசியல் அரங்கில் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
nadunilai.com