கனிமொழிக்கு எம்.எல்.ஏ சீட் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலினிடம் நாடார் சங்கம் கோரிக்கை
Dmk News
தமிழக அரசியல் நிலவரங்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தேசிய கட்சியினர் மாநில அரசியல் மீது விருப்பம் கொள்வதும், மாநில கட்சியினர் தேசிய அரசியல் மீது விருப்பம் கொள்வதும் சமீபத்திய நிகழ்வுகளாக பார்க்க முடிகிறது. எங்கு வெற்றிடம் ஏற்படுகிறதோ அது நோக்கி செல்வது இயல்பு. அப்படித்தான் ஆகிபோயிருக்கிறது மத்திய, மாநில அளவிலான அரசியல் நிலவரங்கள்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி காலத்தில் மாநில அரசியலே போதும் என்கிற அளவில் அரசியல் செய்து கொண்டிருந்தார். தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அரசியல் மீதும் நாட்டம் கொண்டுள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. அதேவேளை தேசிய அளவிலான வேலைகளை கச்சிதமாக முடித்துக் கொடுக்கும் கலைஞரின் மகளும், மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி, மாநில அரசியல் மீது நாட்டம் கொள்வதாக தெரிகிறது. சமீபகாலமாக மாநில அரசியலுக்குள் வர கனிமொழி விரும்புகிறார் என்கிற பேச்சு அடிபடுகிறது. அதுக்காக அவர் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கனிமொழியை மாநில அரசியலுக்குள் கொண்டு வரவேண்டும். மாநில மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு சேவை செய்ய அவர் தேவை என்பதை கருத்தில் கொண்டு, நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு, நாடார் சமுதாயம் நாட்டிற்கு செய்யும் சேவை என்பதையெல்லாம் குறிப்பிட்டுவிட்டதுடன், மாண்பு மிகு தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்த முறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். தூத்துக்குடி அல்லது பாளையங்கோட்டை தொகுதிகளில் எதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்பது நாடார் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.
என்ன செய்ய போகிறது திமுக தலைமை என்பதை பார்ப்போம்.
nadunilai.com