தூத்துக்குடியில் எதிரும் புதிருமாக இருந்த அதிமுக வேட்பாளர்களை ஒன்றிணைத்த பாஜக !
Admk - Bjp
அரசியலில் நிரந்தரமான எதிரியும் இல்லை, நிரந்தரமான நண்பரும் இல்லை என்பார்கள். போட்டியால் வரக் கூடிய தற்காலிக பிரிவுகள், சில திருப்பங்கள் மூலம் சரியாகிவிடுவது வழக்கம். அப்படித்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் எதிரும், புதிருமாக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.சண்முகநாதனும், சி.த.செல்லப்பாண்டியனும் இப்போது ஒன்றாக இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். அதிமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார் எஸ்.பி.சண்முகநாதன், அதேபோல் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளராக இருந்து வருகிறார். மாவட்ட செயலாளர், அமைச்சர் என அதிகாரத்துடன் வலம் வந்த இவர்கள் மத்தியில் சற்று மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் தனித்தனியே பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சண்முகநாதன் ஆதரவாளர்கள், செல்லப்பாண்டியன் ஆதரவாளர்கள் என்று தூத்துக்குடியில் தனித் தனி கோஷ்டிகளாக அதிமுகவினர் செயல்பட்டு வந்தனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதனும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சி.த.செல்லபாண்டியனும் தேர்தலில் போட்டியிடுவது வழக்கம். அப்படித்தான் இப்போதும் அதிமுக தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. மாவட்ட செயலாளர் என்கிற அடிப்படையில் தூத்துக்குடி மாநகர அதிமுகவினர் சண்முகநாதனிடம் இணக்கமாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் செல்லபாண்டியனிடம் இணக்கம் காட்ட மாவட்ட செயலாளர் இசைவு அவசியமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் அதிமுக தலைமை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எஸ்.பி.சண்முகநாதனுக்கும், சி.த.செல்லப்பாண்டியனுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதனும், தூத்துக்குடி தொகுதியில் செல்லப்பாண்டியனும் போட்டியிடுகின்றனர். அத்துடன் தாமரை மலரில் ஒட்டாத தண்ணீர் போல் இருக்கும் இரண்டு தரப்பையும் ஒட்ட வைப்பதற்காக செல்லப்பாண்டியனுக்கு மாநகர செயலாளர் பொறுப்பையும் வழங்கியுள்ளது அதிமுக தலைமை. அப்படியானால் மாநகர எல்லையில் உள்ள அதிமுகவினர், செல்லப்பாண்டியனை ஆதரித்தே ஆகவேண்டும் என்கிற நிலையை உருவாக்கி கொடுத்திருக்கிறது தலைமை.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெற்றுக் கொண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த இருவரையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு அழைத்து வந்த தலைவர் சித்ராங்கதன், எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லபாண்டியன் ஆகிய இருவருக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இரண்டு வேட்பாளரையும் அருகருகே அமரவைத்து, பாஜக நிர்வாகிகள் வரவேற்று பேசினர். இரண்டு வேட்பாளர்களும் மனவிட்டு பேசும் அளவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். தொடர்ந்து அனைவரும் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டனர். கூட்டணி கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் என்று பாஜகவினர் உறுதியளித்தனர். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பார்த்த தொண்டர்கள் சிலர், எப்படித்தான் இவர்கள் ஒன்றிணைந்து செயல்பட போகிறார்களோ தெரியவில்லையே என்று நினைத்தோம். எதிரும், புதிருமாக இருந்து வந்த வேட்பாளர்களை அருகருகே அமரவைத்து பாஜக ஒன்று சேர்த்துவிட்டது. இதுவரை தனது சொல்படி கேட்டு வந்த தனது ஆதரவாளர்களிடம், மாநகர செயலாளரும், வேட்பாளருமான செல்லப்பாண்டியனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று மாவட்ட செயலாளரான சண்முகநாதன் கட்டளையிட்டுள்ளார். அதனால் கோஷ்டி மனப்பான்மையை மறந்து அனைத்து அதிமுகவினரும் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து தேர்தல் வேலையில் ஈடுபட துவங்கியுள்ளனர் என்றனர்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
nadunilai.com