ஆளும் கட்சி தலையீட்டால் அந்தர் பல்டி அடித்த ச.ம.க - ஒரே நாளில் வேட்பாளர் கனவு காலி

sa ma ka

ஆளும் கட்சி தலையீட்டால் அந்தர் பல்டி அடித்த ச.ம.க - ஒரே நாளில் வேட்பாளர் கனவு காலி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பிரபல நடிகர் சரத்குமார்  தொடங்கிய போது, அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் அங்கம் வகித்து அதிமுக துணையுடன் எம்.எல்.ஏ ஆனவர் எர்ணாவூர் நாராயணன். சரத்குமார் திமுகவிடம் விரோதம் காட்டியபோது சரத்குமாரிடமிருந்து வெளியேறி, சமத்துவ மக்கள் கட்சியை போல் சமத்துவ மக்கள் கழகம் என்ற கட்சியை துவங்கி, சமத்துவ கட்சியின் கொடியை போல் சமத்துவ கழகத்தின் கொடியையும் தூக்கி பிடித்தவர் எர்ணாவூரார். கட்சியை துவக்கியதில் இருந்து திமுகவிற்கே ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். அவர்களும் இவருக்கு வாரிய பதவி கொடுத்திருக்கின்றனர். தூத்துக்குடியை பொறுத்தவரையில் மாவட்ட தலைவர் அற்புதராஜ் தலைமையில் சமகவினர் அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்படுவதும், அவர்கள், இவர்களுக்கு ஆதாரவாக நடந்து கொள்வதுமாக இருந்து வருகிறது.

அதனால் திமுக கூட்டணியில் எர்ணாவூர் நாராயணனுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்று கடந்த தேர்தலிலும் எதிர்பார்த்தனர். அப்பவும் கிடைக்கவில்லை, இந்த முறையும் எதிர்பார்த்தனர், கிடைக்கவில்லை. இதனால் டென்ஷனான சமகவினர் தனியாக தேர்தலில் போட்டியிட களத்தில்  இறக்கிவிடப்பட்டனர். திமுகவை மிரட்டுவதற்காக இதை செய்தார்களா அல்லது எதோ அசட்டு தைரியத்தில் செய்தார்களா என்று தெரியவில்லை?. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டி என்று நேற்று(30.0.3.2026)தூத்துக்குடி மாவட்டத்தலைவர் மாலைசூடி அற்புதராஜ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.  

அந்த அறிக்கையில், சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் A.அந்தோணி பிச்சை MA,BL, திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S. ஜெபராஜ் டேவிட் BE, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் B.அருண் சுரேஷ் குமார் BA, ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S.ராஜாத்தி, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் M.A.M.சகாயராஜ் BA,LLB, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் P.கண்டிவேல் ஆறு தொகுதிகளுக்கும் இன்று வேட்பு மனுக்கள் வாங்க பெற்றன. வருகின்ற 4.4.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த தொகுதி ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் மறுநாளான இன்று அதே மாலைசூடி அற்புதராஜ் சார்பில் அறிக்கை வெளியானது. அதில், சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு உறுதுணையாக பாடுபட வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆகவே நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகளும் பணி செய்ய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் எர்ணாவூர் நாராயணனை திமுக தலைமை சமாதானம் செய்திருக்கிறது. அதனால் கொடி பிடித்து தயாரான வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்வற்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். ஒரு நாள் அப்படி செய்தி, மறுநாள் இப்படி செய்தி என்று மாறியிருக்கிறது சமகவினரின் நடவடிக்கை. 

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாலைசூடி அற்புதராஜ்யிடம் கேட்டபோது, சீட் கிடைக்கவில்லை என்பதற்காக போட்டிபோட முயற்சி செய்யது உண்மைதான். திமுக மேலிடத்தில் இருந்து தலைவரிடம் வேண்டாம் என்று பேசியிருக்கிறார்கள். அதனால் தலைவர் எங்ககிட்ட, திமுக வெற்றிக்காக வேலை பாருங்கப்பா என்று சொல்லிவிட்டார். அதனால் இப்போ தேர்தல் வேலையை துவங்கிவிட்டோம் என்றவர், தமிழக முதல்வர் உள்பட அத்தனை அமைச்சர்களுக்கும் எங்க தலைவர் வேண்டியவர், நன்கு பரீட்யமானவரும் கூட. அப்படி இருக்கும்போது அவர்கள் சொல்றதை கேட்காமல் மறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் சொல்றதை எங்களால் மறுக்கவே முடியாது. மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் எங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்களுக்கு எதிராக நாங்க எப்படி செயல்பட முடியும்?. அதனால்தான் தனித்து போட்டியிடும் முயற்சியை நிறுத்திவிட்டோம் என்றார்.