தமிழக தேர்தல் பிரசாரத்தில் ரூ.10,000 ரொக்கத்தை மிஞ்சிய ரூ.8,000 கூப்பன் விளம்பரம்

Admk - Dmk

தமிழக தேர்தல் பிரசாரத்தில் ரூ.10,000 ரொக்கத்தை மிஞ்சிய ரூ.8,000 கூப்பன் விளம்பரம்

கடந்த காலத்தில் எத்தனை நல்லது செய்திருந்தாலும், எதிர்காலத்தில் எத்தனை நல்லது செய்ய போகிறோம் என்று கூறி வந்தாலும் தேர்தல் கால கடைசி நேரத்தில் எந்த செயல் மக்களிடம் ரீச் ஆகிறதோ அதுதான் மக்களை ஓட்டுப்போட தூண்டுகிறது. அதற்காகத்தான் கடைசி நேரத்தில் மிக இனிப்பாக உள்ள சலுகைகளை அறிவிப்பார்கள் அரசியல் கட்சியினர். அப்படி அறிவித்தாலும் அது மக்கள் மத்தியில் எப்படி ரீச் ஆகிறது என்பது இன்னொரு வகையான அரசியல் கலையாகும். அப்படித்தான் தற்போது தமிழக அரசியலில் வாக்குறுதிகள் வகை வகையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. எதை வாங்குவது என்று தெரியாமல் மிட்டாய் கடையில் பிரமித்து போய் நிற்பதுபோல் நிற்கிறார்கள் தமிழக மக்கள். 

வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது அதிமுக தலைமை. அதில் முதல் வாக்குறுதியாக ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் ரூ.10,000 அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது. இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரை சார்ந்தவர்களும் பிரசார கூட்டங்களில் பேசி வருகின்றனர்.  இதேபோல் திமுக தலைமையும் தேர்தல் அறிக்கை மூலம் சலுகை வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் குடும்பதாரர்களுக்கு ரூ.8000 க்கான கூப்பன்  வழங்கப்படும். அந்த கூப்பனை வைத்து பிரிட்ஜ், வாசிங் மிஷின், டி.வி, மின் வீசறி, மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார  கூட்டங்களில் பேசும்போது ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து பேசி வருகிறார். ஆனாலும் அவர் அதை பெரிய அளவில் பில்ட் அப் செய்வதில்லை. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசார கூட்டங்களில் பேசும் போது ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனை புகழ்ந்து பேசுவதும், பெண்கள் அதை எதிர்பார்த்து காத்திருப்பதுபோலவும் பில்ட் அப் செய்து வருகிறார். 

எடப்பாடி பழனிசாமி செய்யும் ரூ.10000பிரசார விளம்பரமும், மு.க.ஸ்டாலின் செய்யும் ரூ.8000 கூப்பன் விளம்பரமும் பொதுவெளியில் போட்டி போடுகிறது. இந்த போட்டியில் ரூ.10000 மானது மக்கள் கையில் நேரடியாக கிடைக்கும். அவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்?. வேறு எதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்?. மத்தியரசு ஆதரவு உண்டு என்பதால் அதிமுக சொல்லும் வாக்குறுதி எளிதில் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்கள் செய்யும் ரூ.8000யை உயர்த்தி காண்பிக்கும் விளம்பரம் ரூ.10000யையே மிஞ்சும் அளவில் தெரிகிறது. 

மேடைக்கும் மேடை ரூ.8000க்கு மிக முக்கியத்துவம் கொடுத்து ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ரூ.10000யை மிகைப்படுத்தி சொல்வதாக தெரியவில்லை. அவர் சொல்வது மக்கள் மத்தியில் ஆணி அடித்தாற்போல் இல்லை என்றே தெரிகிறது. இதனால் ரூ.10000யை ரூ.8000 மிஞ்சியதாக தெரிகிறது. சமீபகாலமாக பல மாநில தேர்தல்களில் கடைசி நேரம் இதுபோன்ற வாக்குறுதிகள்தான் வெற்றியை நிர்ணயம் செய்திருக்கிறது. அப்படியானால் இந்த தொகை வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் நச் என்று கொண்டு போய் சேர்ப்பவர்களுக்குதான் வெற்றி நிச்சயம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.