ஓட்டப்பிடாரம் சண்முகையா முயற்சி தோல்வி - கடைசி நேரத்தில் கை விரித்த தவெக
Dmk News
அதிகார பதவியில் இருக்கும்போது தன்னைச்சுற்றி ஏராளமானோர் சூழ்ந்திருப்பது வழக்கம். அந்த கூட்டம் தனக்கானதுதான் என்று நினைப்பவர்கள் தவறான முடிவெடுத்துவிடுகின்றனர். அப்படித்தான் அங்குமில்லாமல், இங்குமில்லாமல் நடு வெளியில் நிற்கிறார் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏவான சண்முகையா.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் சண்முகையா. தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சியமானவர், திமுக அரசின் பல்வேறு திட்டங்களை தொகுதிக்கு பெற்றுத் தந்தவர். வறட்சியான தொகுதி என பேசப்பட்டு வரும் ஓட்டப்பிடாரம் தொதிக்குள் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட சண்முகையாவிற்கு 2026 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் வேலையை துவங்கியிருந்த சண்முகையாவிற்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. மாவட்ட செயலாளரான அனிதாராதாகிருஷ்ணன், தனக்கு ஆதரவு கொடுக்கவில்லை, திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதையெல்லாம் வைத்து அமைதியாக இருக்க முடியாமல் ஆதரவாளர்களுடன் கொதித்துக் கொண்டிருந்தார் சண்முகையா. இந்தநிலையில் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் அல்லது சுயேச்சையாக போட்டியிடுவார், அவரது சகோதரர் தவெக வேட்பாளர் ஆகப்போகிறார் என்றெல்லாம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அவர் நிச்சயம் தவெக சார்பில் போட்டியிடுவார் அல்லது சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்யவார்என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி நேர முயற்சி என்பதால் தவெக வேட்பாளர் ஆக முடியவில்லை என்கிறார்கள். மேலும் சுயேட்சையாகவும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய அவர் வரவில்லை. எப்படியும் அவர் வேட்பு மனுதாக்கல் செய்ய வருவார் என்று மீடியா, செய்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. திமுகவில் இருந்து ஒருவர் வருகிறார் என்பதற்காக அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளரை மாற்றுவது சரியாக இருக்காது என்று தவெக தலைமை கருதியதாக சொல்கிறார்கள். அதேவேளை, அந்த வேட்பாளரிடம் பேசி அவரை இன்றுவரை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்து வைத்திருந்தது சண்முகையா தரப்புதான் என்றும் சொல்கிறார்கள். மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட தூத்துக்குடி யூனியன் பகுதிகளில் மிகுந்த செல்வாக்கு வைத்திருந்த சண்முகைவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் சோர்ந்துபோயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இவருக்கு பதிலாக திமுக வேட்பாளர் ஆக்கப்பட்ட ராமஜெயம், திமுக அரசு மூலம் சண்முகையா செய்த சில திட்டங்களை சொல்லியே ஓட்டு கேட்டு வருகிறார்.
திமுகவின் இத்தகைய வேட்பாளர் மாற்ற நடவடிக்கையால் அமமுக வேட்பாளரான சுந்தரராஜன் உற்சாகத்தில் இருக்கிறார். இனிமேல் முழு மனதோடு சண்முகையா திமுகவிற்கு வேலைபார்ப்பதும், சண்முகையாவிற்கு திமுக ஆதரவு கொடுப்பதும் சந்தேகம்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் சண்முகையா இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு சென்றிருந்தால் திமுகவில் இருந்து விலகி யார் யாரெல்லாம் அவருடம் தவெகவிற்கு போகிறார்கள் என்று தெரிந்திருக்கும். அவருடம் செல்ல ஒரு கூட்டமே தயாராக இருந்ததாக சொல்கிறார்கள்.
nadunilai.com