ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது - அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு
DMK News
தூத்துக்குடி:23.12.2025
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 28வது வார்டு, பாகம் எண் 189 வாக்குச்சாவடியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் முழுமையாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார். பெயர் விடுபட்டிருந்தால், அதற்கான விண்ணப்பங்களை உடனடியாக பூர்த்தி செய்து, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு முகாம்கள் மூலம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விரைவாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, தோழி விடுதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முறையாக வழங்கவில்லை. மாநில அரசுகளிடம் பாரபட்சமான அணுகுமுறை காட்டுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் திமுக தொண்டர்கள் நேரடியாக களத்தில் இறங்கி மக்கள் உதவி வருகின்றனர். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என வாதிடுகின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் வழங்கி வருவதாகவும், மத்திய–மாநில உறவுகளை அரசியலாக்கும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், மத்திய அரசின் பல திட்டங்களும் தமிழக மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
nadunilai.com