திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தனிநபர் வாகனங்களுக்கு Vehicle Pass கிடையாது!

Thiruchendur Murugan

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தனிநபர் வாகனங்களுக்கு Vehicle Pass கிடையாது!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) நடைபெற உள்ள நிலையில், தனிநபர் வாகனங்களுக்குச் சிறப்பு அனுமதி அட்டை (Vehicle Pass) எதுவும் வழங்கப்படமாட்டாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறாவது நாள் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. இதையொட்டி, சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் திருக்காட்சியைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், திருச்செந்தூர் நகரில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பக்தர்களின் குடிநீர் தேவை, சுகாதாரம், கழிப்பறை வசதி, மருத்துவ உதவி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக திருச்செந்தூர் ஜே.ஜே. நகர், வியாபாரிகள் சங்கப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், சூரசம்ஹாரத்தன்று ஒரே நேரத்தில் ஏராளமான தனியார் வாகனங்கள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதை இயன்றவரை தவிர்த்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி திருச்செந்தூருக்கு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தனிநபர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை இல்லை

இதில் முக்கிய அறிவிப்பாக, நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு தனிநபர் வாகனங்களுக்கென எந்தவிதமான சிறப்பு அனுமதி அட்டையும் (Vehicle Pass) வழங்கப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ஏற்கெனவே அனுமதி அட்டை கிடைக்கும் என எதிர்பார்த்து வாகனங்களில் வரத் திட்டமிடுபவர்கள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பக்தர்கள் தங்களது வாகனங்களை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகனங்கள் செல்ல வேண்டிய வழிகள் தொடர்பாக காவல்துறையினர் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பக்தர்கள் பாதுகாப்பாக சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே, தனிநபர் வாகனப் பயணத்தைத் தவிர்த்து பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.