திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் இலவசமாகச் செல்ல 4 புதிய சிற்றுந்துகள்!
Thiruchendur Murugan
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து சிரமத்தைக் குறைக்கும் வகையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 4 புதிய சிற்றுந்துகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் சிற்றுந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார்.
இரண்டாம் படைவீடாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கந்தசஷ்டி, வைகாசி விசாகம், ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரிக்கிறது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள், நிலையங்களிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் செலவுச் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த இலவச சிற்றுந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026-27ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 67-ன்படி, திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக அழைத்து வர ரூ.1 கோடி மதிப்பீட்டில் 4 சிற்றுந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சிட்டி யூனியன் வங்கியின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் இந்த நான்கு சிற்றுந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கந்தசஷ்டி விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்
கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய ஏற்பாடுகள் வருமாறு:
- கழிப்பறை வசதி: கோயில் வளாகத்தில் 325 நிரந்தரக் கழிப்பறைகளுடன் 300 தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 69 நிரந்தரக் குளியலறைகள் உள்ளன.
- குடிநீர் வசதி: 23 இடங்களில் தண்ணீர் பந்தல்கள், 68 குடிநீர் குழாய்கள், 10 இடங்களில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 300 மி.லி. கொள்ளளவு கொண்ட 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு: 384 நிரந்தர கண்காணிப்பு கேமராக்களுடன் 149 தற்காலிக அதிநவீன கேமராக்கள் என மொத்தம் 533 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
- காவல்துறை பாதுகாப்பு: திருவிழாவின் முதல் நான்கு நாட்களுக்கு 700 காவலர்களும், ஐந்தாவது மற்றும் ஆறாவது திருவிழா நாட்களில் 5,000 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- தீயணைப்புப் பாதுகாப்பு: 140 தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்கள், 5 தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.
- கடல் பாதுகாப்பு: மீன்வளத்துறை மற்றும் கடலோரக் காவல்துறை இணைந்து 5 படகுகள் மூலம் சுழற்சி முறையில் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் 13 ஒளிக்கோபுரங்கள், 8 கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
- மருத்துவ வசதி: கோயில் முதலுதவி மையம், 6 இடங்களில் அரசு மருத்துவ முகாம்கள், 2 தனியார் மருத்துவ முகாம்கள், 7 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 15 இடங்களில் ORS கரைசல் வழங்கும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- தங்குமிட வசதி: 11 தற்காலிகக் கொட்டகைகளும், 5 நிரந்தரத் தங்குமிடங்களும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. - - உணவு மற்றும் பிரசாதம்: கோயில் நிர்வாகம் சார்பில் நாள் முழுவதும் 11,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், தன்னார்வலர்கள் மூலம் மேலும் 15,000 பக்தர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரதமிருக்கும் பக்தர்களுக்கு பால், பழங்கள், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், பொங்கல், பிஸ்கட் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பக்தர்களின் புகார்களைப் பெறுவதற்காகக் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- சூரசம்ஹாரத்துக்கு 10 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு
- இந்த ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் சீ. ரமேஷ், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், முதலுதவி மையம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானின் சூரசம்ஹார விழாவில் எவ்வித சிரமமுமின்றி பங்கேற்கும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழா முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை அனைத்துத் துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பக்தர்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர் கடவுளான முருகப்பெருமானின் பெருமையையும், தமிழின் பெருமையையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
- இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், திருச்செந்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் கௌதம், இணை ஆணையர்கள் அ. அருணாச்சலம், சு. ரோஜாலிசுமதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், கோயில் உதவி ஆணையர் சி. லோகநாதன், நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
nadunilai.com