தூத்துக்குடி மாவட்ட மகளிருக்கு 5 வெள்ளாடுகள், கறவைப் பசு இலவசம் – வரும் 16 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

Goats, Dairy Cows

தூத்துக்குடி மாவட்ட மகளிருக்கு 5 வெள்ளாடுகள், கறவைப் பசு இலவசம் – வரும் 16 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

தொழில் மற்றும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் கிராமப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கால்நடை வளர்ப்பின் மூலம் பெண்கள் சுயதொழில் செய்து நிரந்தர வருமானம் பெறுவதற்கும், குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச ஆடுகள் மற்றும் கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் மகளிருக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள் மற்றும் கறவைப் பசு வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை பெறப்படுகின்றன. தகுதியுள்ள மகளிர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், நிகழாண்டில் 'வெற்றி மகளிர் ஆடு வழங்கும் திட்டம்' முதற்கட்டமாக கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர், விளாத்திகுளம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மகளிருக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். கறவைப் பசு வழங்கும் திட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மகளிருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கறவைப் பசு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். கறவைப் பசு திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அதிகபட்சமாக 25 ஏக்கர் வரை சொந்த நிலம் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், முதிர்கன்னிகள், திருநங்கைகள், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட பிற திட்டங்களின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது.

விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் கீழ்க்கண்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆதார் அட்டை.
குடும்ப அட்டை.
சாதிச் சான்றிதழ்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துவோருக்கு).

தகுதியுள்ள மகளிர் கால்நடை பராமரிப்புத் துறையின் பிரத்யேக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக சுயமாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகியும் விண்ணப்பிக்கலாம். மேலும், ஊராட்சி ஒன்றியத் தலைமையிட கால்நடை நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள பல்நோக்கு பணியாளர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கு வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, தகுதியுள்ள மகளிர் கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், திட்டத்தின் தகுதிகள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் பிற விவரங்களை அறிந்துகொள்ள அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்களைத் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மகளிர் கால்நடை வளர்ப்பைச் சிறுதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டவும், சுயசார்புடன் வாழவும் உதவும் இந்தத் திட்டத்தைத் தகுதியுள்ள பெண்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும்.