கோரம்பள்ளம் அருகே இனிமேல் வெள்ள அபாயம் இல்லை - பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் தயார்

korampallam kulam

கோரம்பள்ளம் அருகே இனிமேல் வெள்ள அபாயம் இல்லை - பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் தயார்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்டப்பட்ட வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி மற்றும் காலாங்கரை ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்தின் மூலம் கோரம்பள்ளம் ஆற்றில் (உப்பாத்து ஓடை) ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலங்கள், வெள்ளப் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி மற்றும் காலாங்கரை ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்தின் மூலம் கோரம்பள்ளம் குளத்தில் (உப்பாத்து ஓடை) ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலங்கள், வெள்ளப் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள  உள்வாங்கிகள் ஆகிய திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. இதில், வீரநாயக்கன்தட்டு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், இன்று (26.08.2023) நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து கோரம்பள்ளம் கண்மாயில் 6150 மீட்டர் நீளத்திற்கு கரையை பலப்படுத்துதல், 1400 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சிமெண்ட் சாலை அமைத்தல், புதிதாக மடை அமைத்தல், கண்மாயின் உட்புறத்தில் தூர் வாரும் பணி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும்  திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் , ’’தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் ஆற்றில் (உப்பாத்து ஓடை) சிறுபாலங்கள், உள்வாங்கிகள் கட்டுதல் மற்றும் புனரமைத்தல், மற்றும் பிற வெள்ள பாதுகாப்பு பணிகள் மதிப்பீடு தொகை ரூ.5.00 கோடியில் நடைபெற்றுள்ளது. மேலும், கோரம்பள்ளம் ஆறு உப்பாத்து ஓடை என்னும் பெயரில் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32.கி.மீ தூரம் பயணித்து கோரம்பள்ளம் குளத்தில் வந்தடைகிறது. பின்பு கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கி.மீ. தூரம் பயணித்து தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு உப்பாத்து ஓடை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கோரம்பள்ளம் குளம் திடீரென அதிக  அளவு வெள்ளம் ஏற்பட்டது. திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியதால் உபரி நீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 20,000 அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. திடீர் நீர் வரத்து காரணமாக கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாத்து ஓடை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டது. அனைத்து உடைப்புகளும் போர்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இக்காட்டாற்று வெள்ளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம். சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், திரு.வி.க நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரபட்டி, வீரநாயக்கன்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளை நகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.

மேற்கூறிய பாதிப்புகள் வருங்காலத்தில் வராமல் தடுக்க இம்மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட பணிகள் இம்மதிப்பீட்டின் கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் ( உப்பாத்து ஓடை) வீரநாயக்கன்தட்டு அருகில் (நெடுகை) 4600 மீ. (நெடுகை) 5350 மீ மற்றும் (நெடுகை) 5400 மீ-ல் அமைந்துள்ள சிறுபாலங்கள் மற்றும் (நெடுகை) 2400 மீ (நெடுகை) 2800 மீ அமைந்துள்ள உள்வாங்கிகள் சேதமடைந்துள்ளதால் அதனை புனரமைத்தல், அத்திமரப்பட்டி மற்றும் ஜே.எஸ் நகர் குடியிருப்புகளில் வெள்ளப்பெருக்கை தடுக்க (நெடுகை) 4350 மீ-ல் கூடுதல் உள்வாங்கி கட்டுதல் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பருவ மழை காலத்தில் உப்பாத்து ஓடையில் உள்வங்கிகள் மற்றும் சிறுபாலங்கள் வழியாக வெள்ள நீர் குடியிருப்புகளில் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் வடிகால் பணிகளுக்கு ஷட்டர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனமழையின் போது உப்பாத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். உப்பாத்து ஓடை கரையின் இரு புறமும் உள்ள 2200 ஏக்கர் விவசாய நிலங்கள்,  கரையின் இரு புறமும் உள்ள உப்பளங்கள், 10 கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படும். நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதற்காக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை தவிர்க்கப்படும்’’ என்று தெரிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ். 

ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவிப்பொறியாளர் ரத்தினகுமார், தூத்துக்குடி வட்டாட்சியர்  பிரபாகரன், செயற்பொறியாளர் (தாமிரபரணி  வடிநிலக் கோட்டம்) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம்,  முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத்நிர்மல், விவசாய சங்கத் தலைவர்  பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.