பூச்சிக்கொல்லி மருந்துகளால் உயிர் சேதம், உயிர் சேதங்களால் பயிர் சேதம் – விவசாயிகளின் துயரத்திற்குத் தீர்வு ?
Farmer News
இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தின் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் பங்கு வகிக்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இந்த இயற்கைச் சுழற்சியில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், அதன் தாக்கம் மற்ற உயிரினங்களையும் மனிதர்களையும் பாதிக்கும். இதற்கு விவசாய நிலங்களில் அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளன.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் வயல்வெளிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கின்றனர். ஆனால், முறையற்ற அல்லது அளவுக்கு அதிகமான மருந்துப் பயன்பாடு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுடன், வயல் வரப்புகளில் வாழும் நண்டுகள், நத்தைகள், பயனுள்ள பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களையும் பாதிக்கிறது.
இவ்வாறு சிறிய உயிரினங்களின் எண்ணிக்கை குறையும்போது, அவற்றை உணவாகக் கொண்டு வாழும் பறவைகள் மற்றும் நரி உள்ளிட்ட விலங்குகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம். இதனுடன் காடுகள் சுருங்குதல், புதர்ப்பகுதிகள் அழிக்கப்படுதல், மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களும் வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பாதிக்கின்றன. இதனால் இயற்கையில் நிலவ வேண்டிய உணவுச் சங்கிலி பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வனப்பகுதிகள், புதர்ப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் அருகருகே அமைந்துள்ள இடங்களில் பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன பகுதிகளிலும் பன்றிகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். பயிர்கள் சேதமடைவதால் உழைப்பு, முதலீடு, வருமானம் என அனைத்தும் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்பட்ட பன்றிகள் தப்பிச் சென்று நீண்டகாலம் காட்டுப்பகுதிகளில் வாழ்வதும், காட்டிற்குள்ளேயே வாழும் காட்டுப்பன்றிகளும் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பன்றிகளால் பயிர்கள் சேதமடையும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
பன்றிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக நரிகளை விவசாயப் பகுதிகளில் கொண்டுவந்து விடலாம் என்ற கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பன்றிகளை குட்டி பருவத்திலேயே அது அழித்துவிடும் என்கிற நம்பிக்கை கூறப்படுகிறது. அவ்வாறு நரியை கொண்டுவிடும் போது அப்பகுதி அதற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். நண்டு, நத்தைகள் மற்றும் எலிகள் உள்ளிட்ட அவைகளுக்கு தேவையான உணவு கிடைக்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்துகளால் அவைகள் குறைந்து போகுமானால் நரிக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும். அந்த இனம் பழையபடியே அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.
இதுமட்டுமில்லாமல் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் சில வேதிப்பொருட்கள் மழைநீர் மற்றும் வடிகால் வழியாகக் குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. சாக்கடை நீர் கலப்பதும் நீர்நிலைகளின் தரத்தைக் குறைத்து மீன்களின் வாழ்வை அச்சுறுத்துகிறது. அதேபோல், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாகக் குறிப்பிடப்படும் கெழுத்தி மீன் இனத்தால் உள்நாட்டு மீன் இனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வெளியில் இருந்து வருவது மட்டுமே பாதிப்பு இல்லை. அவர்கள் மேற்கொள்ளும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளுவது, வயல் வரப்புகள், புதர்ப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து, அங்கு வாழும் உயிரினங்களின் வாழ்விடத்தை பாதுகாக்காமல் விடுவது, பூச்சிக்கொல்லி மருந்து கலந்த நீரை பொதுக் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்குச் செலுத்துவது, காய்கள் மற்றும் பழங்களைப் பழுக்க வைப்பதற்காக அனுமதியற்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது மூலம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
விவசாயம் என்பது பயிர்களை விளைவிப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. மண், நீர், நுண்ணுயிரிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கை அமைப்பின் ஒரு பகுதியாகவே விவசாயம் இயங்குகிறது. வயல்வெளிகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல. சில உயிரினங்கள் பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மண்ணின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. அதேவேளையில், சில விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகளும் அவசியம். விவசாயிகளின் வாழ்வாதாரமும் வனவிலங்குகளின் வாழ்விடமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இரண்டையும் பாதுகாக்கும் வகையில் அரசு, விவசாயிகள், வனத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
இயற்கையின் சமநிலையைப் பாதுகாக்கும் விவசாய முறைகளைப் பின்பற்றுவதன் மூலமே நீண்டகாலத்தில் பயிர்ச் சேதங்களைக் குறைத்து, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும்.
நடுநிலை நியூஸ் | nadunilai.com
nadunilai.com