தரிசு நிலங்களில் வேம்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு மானியம் - வேளாண்மை அதிகாரி தகவல்

Neem news

தரிசு நிலங்களில் வேம்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு மானியம் - வேளாண்மை அதிகாரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு  ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக  மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்ரமணியன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குப்பு:

வேம்பின் இலை, பழம், கொட்டை, எண்ணெய், பட்டை, வேர், புண்ணாக்கு போன்ற வேம்பின் அனைத்து  பொருட்களும் இயற்கை மருத்துவத்திலும், இயற்கை விவசாயம் மற்றும் உயிர்ம வேளாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பிற்கும் பெரிதும் பயன்படுகிறது. மேலும், சுற்றுசூழல் பாதுகாப்பதிலும், மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும் இது உதவுகிறது. இத்தகைய மகத்தான பயன்களை கொண்ட வேம்பம்மரத்தை விவசாயிகளிடையே அதிகளவில் பயிர் செய்திட ஊக்கமளிக்கும் வகையில், மத்திய - மாநில அரசு நிதியுதவியுடன், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் தரிசாக உள்ள நிலங்களில் வேம்பு நடவு செய்ய தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்புத் திட்டம் -  எண்ணெய் வித்து மரப்பயிர்கள் இனத்தில், விவசாயிகளுக்கு வேம்பு நடவு செய்ய மற்றும் பராமரிப்பு செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய் வித்து மரப்பயிரான வேம்பு நடவு செய்ய தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அவ்வகையில் நிகழாண்டிற்கு மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் கீழ் 11 ஹெக்டேர் பரப்பளவில் வேம்பு நடவு செய்ய 1.87 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 400 வேம்பு மரக்கன்றுகள் என்ற அளவில் புதிதாக நடவு செய்ய ரூ.17 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக நடவு செய்த முதல் 3 ஆண்டுகளுக்கு, ஊடு பயிரிடுதல் வகைக்கு ரூ.1000  மற்றும் பராமரிப்பு மானியமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயிலி மூலம் பதிவு செய்யலாம் அல்லது அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.