திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: நவ.14, 15ல் போக்குவரத்து மாற்றம்!
Thiruchendur Murugan
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நவம்பர் 14, 15 ஆகிய இரண்டு நாட்களிலும் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள், வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்துள்ளது. குறிப்பாக, திருச்செந்தூர் வழியாக பிற ஊர்களுக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட உள்ளன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர, சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் 14, 15ல் சரக்கு வாகனங்களுக்குத் தடை
நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாகச் செல்லும் இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள், உவரி மற்றும் மணப்பாடு பகுதிகளில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வழியாகச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை
திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களைத் தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக உவரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. அதேபோல் கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் வழித்தடத்தைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.
பொதுப் போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகள்
- தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக வரும் வாகனங்கள்: திருச்செந்தூரைக் கடந்து குலசேகரப்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி மற்றும் உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்கள், திருச்செந்தூரைக் கடந்து செல்ல முடியாத சூழலில் ஆறுமுகநேரி DCE சந்திப்பு, திருநெல்வேலி ரோடு நல்லூர் 'V' சந்திப்பு, ராணிமகாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாகச் செல்ல வேண்டும். மாற்றாக ஆறுமுகநேரி பஜார், மூலக்கரை, அம்மன்புரம், ராணிமகாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி வழியாகவும் செல்லலாம். சண்முகபுரம் ரயில்வே கேட் வழியாக ராணிமகாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி சென்றும் மாற்றுப்பாதையைப் பயன்படுத்தலாம்.
- குரும்பூர் வழியாக வரும் வாகனங்கள்:குரும்பூர் வழியாகத் திருச்செந்தூரைக் கடந்து குலசேகரப்பட்டினம், உவரி, கன்னியாகுமரி மற்றும் உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் நல்லூர் 'V' சந்திப்பு, ராணிமகாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாகச் செல்ல வேண்டும்.
- திருச்செந்தூரைக் கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் செல்லும் வாகனங்கள் குலசேகரப்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமகாராஜபுரம், நல்லூர் 'V' சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.
- நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக வரும் வாகனங்கள்: திருச்செந்தூரைக் கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் செல்லும் வாகனங்கள் பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமகாராஜபுரம், நல்லூர் 'V' சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.
அரசு சிறப்புப் பேருந்துகளுக்குத் தனி வழித்தடம்
திருவிழாவையொட்டி இயக்கப்படும் அரசு சிறப்புப் பேருந்துகளுக்காக மூன்று இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி வழித்தடம்: தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக வரும் சிறப்புப் பேருந்துகள் ITI வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட வேண்டும். அங்கிருந்து பேருந்துகள் வந்த வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். மழை அதிகமாகப் பெய்து ITI வளாகத்தில் பேருந்துகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், பகத்சிங் பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, குறிஞ்சிநகர், பிரசாத் நகர், சண்முகபுரம் ரயில்வே கேட் வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.
திருநெல்வேலி, குரும்பூர் வழித்தடம்: இந்த வழியாக வரும் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி சாலையில் ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட வேண்டும். நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், கன்னியாகுமரி வழித்தடம்: இந்த வழியாக வரும் சிறப்புப் பேருந்துகள் பரமன்குறிச்சி சாலையில் FCI குடோனுக்கு மேற்குப் பகுதியில், சர்வோதயா அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும். மூன்று தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்தும் கோயிலுக்கு அருகில் பக்தர்களை அழைத்துச் செல்ல சுற்றுப் பேருந்துகள் (Shuttle Bus) இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களை இறக்கிவிடும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திரும்பும்போது தெற்கு ரதவீதி, முருகாமடம், முத்தாரம்மன் கோவில் தெரு மற்றும் அரசு மருத்துவமனை பின்புறப் பகுதி வழியாக தற்காலிகப் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும்.
தனியார் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள்
பக்தர்கள் தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பரமன்குறிச்சி சாலைகளில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக வருபவர்கள்:
ராஜ்கண்ணா நகர் வழியாக துது.நகர் வாகன நிறுத்தம், ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிர்புறம், அரசு தொழிற்பயிற்சி நிலையமான ITI எதிர்புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். திரும்பிச் செல்லும்போது வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம் தாயம்பள்ளி, காயல்பட்டினம் பேருந்து நிலையம், ICICI வங்கி சந்திப்பு, ஆறுமுகநேரி கடலோரச் சோதனைச் சாவடி வழியாகச் செல்ல வேண்டும். மழை அதிகமாகப் பெய்தால் வீரபாண்டியன்பட்டினம் - காயல்பட்டினம் சாலையில் விஸ்டம் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் அவசரகால வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, குரும்பூர் வழியாக வருபவர்கள்:
ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம் உள்ள வியாபாரிகள் சங்க வாகன நிறுத்தம், அன்புநகர் வாகன நிறுத்தம், ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்தம், கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஐடியல் டவுன் மற்றும் செந்தூர் நகர் வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். திரும்பிச் செல்லும்போது வந்த வழித்தடத்திலேயே செல்ல வேண்டும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக வருபவர்கள்:
பரமன்குறிச்சி சாலையில் FCI குடோன் அருகே உள்ள முருகன் லேண்ட், சுந்தர் லேண்ட் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரப்பட்டினம் வழியாக வருபவர்கள்:
ஆலந்தலை, என். முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வழியாக வந்து, பரமன்குறிச்சி சாலையில் வலதுபுறம் திரும்பி முருகன் லேண்ட், சுந்தர் லேண்ட் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான நடைபாதை வழித்தடங்கள்
பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து பாதுகாப்பாகக் கோயில் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதற்காகப் பல்வேறு நடைபாதை வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி சாலையில் JJ நகர் பார்க்கிங் மற்றும் TB ரோடு வழியாக வருபவர்கள் தாலுகா அலுவலகம், கோவில் காவல் நிலையம், மினி சிவமுருகன் லாட்ஜ் சந்திப்பு, நாடார் தெரு, சன்னதி தெரு, சுபா மெடிக்கல் சந்திப்பு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் சந்திப்பு, நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி மற்றும் TB ரோடு ஐடியல் பார்க்கிங் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் TB ரோடு, மணி அய்யர் ஹோட்டல் சந்திப்பு வழியாகக் கோயிலின் வடக்குப் பகுதிக்குச் சென்று, மேற்கு மற்றும் தெற்கு கிரிபிரகாரங்கள் வழியாகக் கடற்கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டும். கூட்ட நெரிசலுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சாலைகள் வழியாக வரும் பக்தர்கள் பகத்சிங் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் சந்திப்பு, நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லலாம். பரமன்குறிச்சி மற்றும் குலசேகரப்பட்டினம் சாலைகள் வழியாக வருபவர்கள் முருகாமடம், தெப்பக்குளம், முத்தாரம்மன் கோவில் தெரு சந்திப்பு, தெற்கு ரதவீதி, அமலிநகர் சந்திப்பு, நவாப்பழ சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
மேலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் கடற்கரைப் பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், மாற்றுப் பாதைகள் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முக்கிய இடங்களில் LED தொலைக்காட்சிகள் அமைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரிசனம் முடித்து வெளியேறும் பக்தர்களுக்குத் தனி வழிகள்
கோயிலின் வடக்குப் பகுதி வழியாக வெளியேறும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் சந்திப்பு, TB ரோடு வழியாக JJ நகர் பார்க்கிங் அல்லது மெயின் ஆர்ச் வழியாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, பரமன்குறிச்சி, குலசேகரப்பட்டினம் சாலைகளுக்குச் செல்ல வேண்டும். கோயிலின் மத்தியப் பகுதியான சன்னதி தெரு வழியாக வெளியேறும் பக்தர்கள் தேரடி, கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச், மெயின் ஆர்ச் வழியாகத் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி சாலைகளுக்குச் செல்லலாம். மாற்றாக அமலிநகர் சந்திப்பு, தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு, முருகாமடம் வழியாகப் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரப்பட்டினம் சாலைகளுக்குச் செல்லலாம். கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகளில் இருந்து வெளியேறும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் சந்திப்பு, தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு, முருகாமடம் வழியாகப் பரமன்குறிச்சி அல்லது குலசேகரப்பட்டினம் சாலைகளுக்குச் செல்ல வேண்டும். கடற்கரைப் பகுதியில் கூட்டம் மிக அதிகமாக இருந்தால், நாழிக்கிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை குடியிருப்பு, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு வழியாக எடிசன் மருத்துவமனை அருகிலுள்ள முருகாமடம் சந்திப்பு வழியாகவும் வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றாக கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு வழியாகவும் பக்தர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
மழை பெய்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கந்தசஷ்டி விழா நடைபெறும் நாட்களில் மழை அதிகமாகப் பெய்யும் பட்சத்தில் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாற்று வாகன நிறுத்தங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நடைபாதை வழித்தடங்கள் செயல்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூர் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களைச் சாலையோரங்களில் நிறுத்தாமல், காவல்துறையினர் ஒதுக்கும் பார்க்கிங் பகுதிகளில் வரிசையாக நிறுத்த வேண்டும். போக்குவரத்து மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து பயணத்தைத் திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பக்தர்களும் பொதுமக்களும் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
nadunilai.com