அரசியல் கட்சிக்கும் அரசு நிர்வாகத்திற்கும் வித்தியாசம் தெரியாத தவெகவினர்!
TVK NEWS
அரசியல் கட்சிக்கும் அரசு நிர்வாகத்திற்கும் வித்தியாசம் தெரியாத தவெகவினர்!அதிகார வரம்பை மீறி செயல்படும் நிர்வாகிகள்; ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்கள்!
அரசியல் கட்சி நிர்வாகம் வேறு, அரசு நிர்வாகம் வேறு. இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருவது, அக்கட்சிக்கும் ஆட்சிக்கும் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இளைஞர்களின் எழுச்சியின் விளைவுதான் தவெகவின் பலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், அதே இளைஞர்கள் அனுபவமின்மை காரணமாக அறியாமல் செய்துவரும் சில தவறுகள், அவர்கள் ஆதரவுடன் உருவான ஆட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தி வருவதையும் மறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்த ஆரம்பக் காலத்தில் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் தவெகவினர் ஆர்ப்பரித்ததையும், கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையும் பெரிய தவறாகக் கருத முடியாது. அவர்கள் நீண்டகால அரசியல் அனுபவம் பெற்றவர்களாக ஆட்சிக்கு வரவில்லை. எனவே, போகப்போக நிர்வாக நடைமுறைகளைக் கற்றுக்கொண்டு சரியாகிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது நடைபெறும் சில சம்பவங்களைப் பார்க்கும்போது, அரசியல் கட்சியின் அதிகாரத்திற்கும் அரசு நிர்வாகத்தின் அதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இன்னும் சிலர் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
சோத்துப்பாறை அணையில் ஏற்பட்ட சர்ச்சை
இதற்கு சமீபத்திய உதாரணமாக அமைந்திருக்கிறது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை விவகாரம். சோத்துப்பாறை அணையின் புதிய ஆயக்கட்டு கால்வாய் மதகிலிருந்து, தவெக நிர்வாகிகள் சிலர் அதிகாரிகளின் அனுமதியின்றி தண்ணீரைத் திறந்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பெரியகுளம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் கட்சி நிர்வாகிகள் தண்ணீரைத் திறந்ததாகக் கூறி, அந்த நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸாகவும் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு முக்கியமான விளக்கத்தையும் கவனிக்க வேண்டும். அணையின் பிரதான மதகுகள் திறக்கப்படவில்லை என்றும், அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை விவசாயக் கண்மாய்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாயின் மதகுதான் திறக்கப்பட்டது என்றும் நீர்வளத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான அதிகாரிகளின் அனுமதியின்றி மதகைத் திறந்தது மற்றும் அதனைப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்ததாகக் காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
சோத்துப்பாறை அணை மூலம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் இருப்பு, பாசனத் தேவை, குடிநீர்த் தேவை, கால்வாய்களின் நிலை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு எப்போது, எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை அரசிடம் எடுத்துச் செல்வதும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கச் செய்வதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. ஆனால், தாங்களே முடிவெடுத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் மதகுகளைத் திறப்பது சரியான நிர்வாக நடைமுறையாகாது. இந்த விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கண்டனம்
இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தி நிற்கும் சூழலில், தண்ணீரின் முக்கியத்துவத்தை உணராமல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பயன்படும் அணை நீரை வீணாக்கியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தவெகவினரின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வந்த பிறகு தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாகவும், சோத்துப்பாறை அணையில் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தண்ணீர் திறந்துவிட்டது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு நடத்திய சர்ச்சை
அணை விவகாரம் மட்டுமல்லாமல், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவு நேரத்தில் அரக்கோணம் மற்றும் தக்கோலம் காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் விளக்கம் கேட்டதுடன், காவல் நிலையப் பதிவேடுகள் மற்றும் பெண் காவலரின் கைப்பேசி தொடர்பாகவும் ஆய்வு செய்ததாகக் கூறப்படும் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு காவல் நிலையங்களில் இத்தகைய ஆய்வு நடத்துவதற்கான அதிகாரம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது. இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தியதாக வெளியான தகவல்களும் இந்த விவாதத்தை அதிகப்படுத்தின. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது அரசியலின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவற்றில் எழுப்பப்படும் நிர்வாகம் சார்ந்த கேள்விகளை ஆளும் கட்சி அலட்சியப்படுத்திவிட முடியாது.
அதிகாரம் என்பது பொறுப்பு; விளம்பரத்திற்கான வாய்ப்பல்ல!
ஒரு அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் அல்லது பேரூர்ச் செயலாளர் என்பதற்காக அரசு அலுவலகங்களிலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள பொதுச் சொத்துகளிலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடைத்துவிடாது. அதேபோல், சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவருக்கும் அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளைத் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது. மக்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லவும், அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், சட்டமன்றத்திலும் சம்பந்தப்பட்ட துறைகளிடமும் கேள்வி எழுப்பவும் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால், நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டே அவை நடைபெற வேண்டும். அணைகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிர்வாக விதிமுறைகள் உள்ளன. அவற்றை மதிக்காமல் செயல்படுவது ஆளுங்கட்சியினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆர்வம், அரசு நிர்வாக நடைமுறைகளைக் கடந்து செல்லும் அளவுக்கு வளர்ந்துவிடக் கூடாது. ஒரு நல்ல செயலைச் செய்தாலும் அதற்குரிய அதிகாரம், நடைமுறை, சட்ட விதிகள் ஆகியவை முக்கியம்.
முதல்வர் விஜய் கவனிக்க வேண்டிய விஷயம்
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படும் தவெக அரசு, தன்னுடைய தொடக்கக் காலத்திலேயே நிர்வாக ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இளைஞர்களின் ஆதரவு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு, புதிய அரசியல் மாற்றத்திற்கான நம்பிக்கை ஆகியவை மட்டுமே ஒரு ஆட்சியை நீண்டகாலம் நிலைநிறுத்திவிட முடியாது. நல்ல நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, அதிகாரிகளின் சுதந்திரமான செயல்பாடு, மக்களுக்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துதல் ஆகியவையே ஓர் அரசின் வெற்றியைத் தீர்மானிக்கும். எனவே, கட்சிப் பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளின் பணிகளில் கட்சியினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சியாக இருக்கும்போது தொண்டர்களின் ஆர்வமும், தலைவர்களின் வழிகாட்டுதலும் வெற்றியைத் தரலாம். ஆனால், ஆட்சிக்கு வந்துவிட்டால் அது வேறு. அப்போது கட்சியின் விருப்பத்தைவிட அரசியல் சட்டம், அரசு விதிமுறைகள், மக்கள் நலன் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தவெகவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் எழுச்சி எந்த அளவுக்கு உதவியதோ, அதே இளைஞர்களின் பொறுப்பான செயல்பாடுதான் அந்த ஆட்சியின் நற்பெயரையும் காப்பாற்றும். இதை தவெகவினர் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
nadunilai.com