இந்த ஆண்டு தூத்துக்குடி தெப்பத் திருவிழா நடைபெறாது : மாநகராட்சிக்கு அறநிலையத்துறை தகவல்

kovil news

இந்த ஆண்டு தூத்துக்குடி தெப்பத் திருவிழா நடைபெறாது : மாநகராட்சிக்கு அறநிலையத்துறை தகவல்

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தெப்பத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகளை தொடங்கியது. பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தெப்பக்குளத்தின் தென்புறம் மற்றும் வடபுறங்களில் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் உருவானதால், சீரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவிருந்த தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில், மேயர் ஜெகன் பொியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி அதிகாரிகள், பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் தெப்பக்குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், “தெப்பக்குளத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் முழுமையாக சரிசெய்யப்படும். வல்லுநர்களின் ஆலோசனை அடிப்படையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தெப்பத் திருவிழா நடைபெற தேவையான அனைத்து வசதிகளையும், ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் 100 சதவீதம் செய்து தர தயாராக உள்ளது. இனி எந்த வித பாதிப்பும் இருக்காது” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சிவன் கோவில் அறங்காவலர் குழு,“பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மை. தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை நடத்த இயலாது. அதனால், தெப்பத் திருவிழா அடுத்த ஆண்டே நடைபெறும்” என தெளிவுபடுத்தினர்.

மாநகராட்சி தரப்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மீண்டும் உறுதியளிக்கப்பட்டபோதும், அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கான வாய்ப்பில்லை என உறுதியாக தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த தெப்பத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது,சிவன் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கந்தசாமி,அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம்,நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அஸ்வினி,உதவி செயற்பொறியாளர் முத்துராமன்,ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி,மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ்,அறநிலையத்துறை சார்ந்த பார்தவன், சுப்பையா, சீலன் ஸ்ருதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.