தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சையும், விளக்கமும்

Thoothukudi G.H

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சையும், விளக்கமும்

மருத்துவர்களையும், செவிலியர்களையும் கடவுளுக்கு நிகராக போற்றுகின்றனர் உலகத்தார். கொரோனா காலத்தில் அதை கண்கூடாக காண முடிந்தது. அன்று முதல் இன்றுவரை மருத்துவத்துறையினரையும், சுகாதாரப்பணியாளர்களையும் மக்கள் நல்லமுறையில்தான் மதித்து வருகின்றனர். ஆனாலும் சில இடங்களில் அந்த துறையினர் மீதும் புகார் எழ துவங்கிவிட்டன. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குறித்துதான் அந்த புகார்.   

இரத்தமும், சதையும் படிந்த கத்தரி மற்றும் கத்தியை சிறுவன் கையால் கழுவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவலநிலை! என்கிற தலைப்பில் வாட்சப் குருப்களில் ஒரு பதிவு வெளியானது.  

’’எனது குடும்ப உறுப்பினரின் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று சொல்லப்படும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நான் பார்க்கவில்லை, மாறாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துக்கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நான் சிறுவயதில் பார்த்த மருத்துவமனைகளில், செவிலியர்கள் என்பவர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு, நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதையும், அவர்களின் காயங்களை சுத்தம் செய்து கட்டு போடுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது, செவிலியர்கள் அந்த பணியை செய்வதில்லை. அவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் டேட்டா என்டரி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறனர். நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியினைகூட செவிலியர் பள்ளி மாணவிகள்தான் செய்கின்றனர். 

பயிற்சி என்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் செய்யும் வேலையை பார்த்து, பயிற்சி எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்களும், மருத்துக்கல்லூரி மாணவர்களும், செவிலியர் பள்ளி மாணவிகளும்தான் மருத்துவம் பார்க்கின்றனர். மருத்துவர்கள் விசிட் என்கிற பெயரில் பார்வையிட்டு செல்கின்றனர். அரசு மருத்துமனை என்பது ஏழைஎளிய மக்களை வைத்து பயிற்சி எடுத்துக் கொள்ளும் புராஜக்ட் களமாகவே செயல்பட்டு வருவது கண்டு மிகவும் வேதனையடைந்தேன். அதில் ஒரு சம்பவம்தான், நோயாளிகளின் காயங்களை சுத்தம் செய்து கட்டுப்போடும் பயிற்சி மருத்துவர்கள், அந்த நோயாளிகளுக்கு பயன்படுத்திய இரத்தம், சதை படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களிடம் கொடுத்து கழுவித் தரச் சொல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதிலும், காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த ஒரு நடுத்தர வயது ஆணின் காயத்தை சுத்தம் செய்த இரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை அவரின் மகன் (சுமார் 10 வயது இருக்கும்) கழுவுவதை கண்டு கண்கலங்கினேன். 

 கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சுமார் 3 மணிநேரம் தூத்துக்குடி மருத்துவமனையை ஆய்வு செய்தார். கலெக்டர் அவர்களிடம் பணிவான வேண்டுகோள், தயவுசெய்து நீங்கள் கலெக்டராக ஆய்வுக்கு சென்றால் அங்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு சாதாரண குடிமகனாக மாறுவேடத்தில் நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால்தான் அங்கு நடக்கும் உண்மை உங்களுக்கு தெரியவரும். இன்னும் சொல்லப்போனால், மருத்துக்கல்லூரி மருத்துவமனை என்று உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை. உதாரணமாக சிறுநீரக நோய்களுக்கு இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலைதான் நிலவுகிறது. எலி போன்ற உயிரினங்களை பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைக்கூடங்கள் போல் செயல்படுகிறது அரசு மருத்துவமனை’’ என்கிறது அந்த பதிவு.

இதனைக்கண்டதும் சமூக வலைதளங்கள் மூலம் றெக்கைகட்டியது இந்த தகவல். எப்படிப்பட்ட சிக்கல் வருமோ தெரியவில்லையே என்று அதிர்ந்தது அரசு மருத்துவமனை நிர்வாகம். இந்தநிலையில் குறிப்பிட்ட அந்த சிறுவனின் தந்தை மருத்துவனை டீனுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வெளியிடப்பட்டது. அதில் ரூ.20 யை கொடுத்து அந்த வீடியோவை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர். 

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை டீன் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்த மருத்துவமனைக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த சர்க்கரை நோயாளி ஒருவர் வலது காலின் இரண்டாவது விரல் அழுகிய நிலையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அந்த விரலை அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். அந்த காயத்தை குணமாக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தினமும் அவரின் காயத்துக்கு கட்டு மாற்றி வருகிறோம். அவ்வாறு காயத்துக்கு கட்டு மாற்றிவிட்டு, அந்த கத்தி, கத்தரிக்கோல் ஆகியவற்றை தவறுதலாக நோயாளியின் படுக்கையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனை அந்த நோயாளி தனது மகனை எடுத்துச் சென்று சுத்தம் செய்யக் கூறியுள்ளார். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதனை இங்குள்ள பணியாளர்கள்தான் சுத்தம் செய்வர். ஆனால், அன்றையதினம் இதுபோன்ற தவறு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து விபரம் அறிந்த சிலர், ‘’தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 600க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு என தொடர்ந்து பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வேலைப்பளு காரணமாக தனக்குத்தானே மயக்க ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதற்கு டாக்டர்கள் செவிலியர்கள் தங்கள் பணிகளை பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் வேலை வாங்குவதுதான் காரணம் என்றும், அதனால் ஏற்பட்ட மனஉளச்சலால்தான் பயிற்சி மருத்துவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் மறைத்துவிட்டனர் என்கின்றனர்.