நடுவைகுறிச்சியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் - ஏராளமானோர் பயனடைந்தனர்

Nam Indiyar Katchi

நடுவைகுறிச்சியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் - ஏராளமானோர் பயனடைந்தனர்

இப்போதெல்லாம் எந்த மருத்துவ மனைகளுக்கு போனாலும் அங்கே கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது. அதிலும் கிராமத்தில் இருந்து ஒருவர் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் ஒருநாள் முழுவதும் அதற்கு ஆகிவிடுகிறது. வாகங்களில் போகவேண்டும், வரிசையில் காத்துகிடக்கவேண்டும் என்பதெல்லாம் அன்றாடம் அனுபவிப்பதில் ஒன்றாகிவிட்டது. இந்தநிலையில் வீட்டருகே அந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்றால் அது  பெரிய செளகரியமாகும். அப்படியொரு செளகரியத்தை செய்து கொடுத்திருந்தனர் நாம் இந்தியர் கட்சியை சேர்ந்தவர்கள். 

ஆம், சாயர்புரம் நகர நாம் இந்தியர் கட்சி, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சாயர்புரம் அருகே நடுவைகுறிச்சியில் இலவசமாக கண் பரிசோதனை முகாமை நடத்தியிருக்கின்றனர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். 

இந்த கண் சிகிச்சை முகாமிற்கு நாம் இந்தியர் கட்சி சாயர்புரம் நகர செயலாளர் பரத் தலைமை வகித்தார்.  நகரத் தலைவர் ஜெயபாலன்,  பொருளாளர் பொன்ராஜ், துணைச் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

சிறப்பு விருந்தினர்களாக கட்டாலங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் பன்னீர்செல்வம் மனோகர சிங், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மாரிமுத்து பட்டன், நாம் இந்தியர் கட்சி மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் உடையார், மாநில தொழிற்சங்க தலைவர் சரவணக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னத்துரை, சேசு ராஜேந்திரன்,  எட்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் அனைத்து விதமான கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளபட்டன. இதில் 15 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சாய்ராம் நகர நாம் இந்தியர் கட்சியினர் செய்திருந்தனர்.