தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை - ரயில்நிலையம், பேருந்துநிலையத்திற்கிடையே சிறப்பு பஸ் ஏற்பாடு
Train news
தொழில் தொடர்புள்ள தூத்துக்குடி, மதுரை, பழனி,பொள்ளாச்சி, கோயம்புத்தூர் இடையிலான மக்களின் போக்குவரத்து வசதிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று முன் தினம் (19ம் தேதி)ரயில் பயணத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில், மேட்டுபாளையம் - கோயம்புத்தூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை - பழனி- ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - சாத்தூர் - கோவில்பட்டி - தூத்துக்குடி இடையே இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் நேற்று முன் தினம் கிளம்பிய இந்த ரயில், நேற்று அதிகாலை தூத்துக்குடிக்கு வந்தது. பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோளின்படி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஏற்பாட்டில் ரயில்நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சிட்டி பஸ்ஸ்டாண்டிற்கும், திருச்செந்தூருக்கும் அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பேருந்துகளில் ரயில் பயணிகள் சென்றனர். அதேபோல் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டின் பேரில் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து கிளம்பி ரயில் நிலையத்திற்கு சென்றது. இரவு 10.50 மணிக்கு புதிய ரயில் கிளம்பியது. அதனை திமுகவினர், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். பயணிகள் நலச் சங்கத்தினர் சார்பில் பயணிகளுக்கு இனிப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அப்போது திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் நிர்மல், அந்தோணி பிரகாஷ் மார்டின் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர் ஆர்.கோடீஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்க சார்பில் தலைவருக்காக அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே. லெட்சுமணன், துணைத் தலைவர் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிர்வாக செயலாளர் ஜே. அந்தோணி நேவிஸ் ஆனந்தன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம். பபியான், எம். நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி ரயில்நிலையம், பேருந்து நிலையம் இடையிலான இடைவெளி சற்று கூடுதலாக இருப்பதாலும் இரவு 10.50 மணிக்குத்தான் இரவு ரயில் கிளம்புகிறது. அதுபோல் அதிகாலை 4.00 மணிக்கே ரயில் வந்துவிடுகிறது என்பதால் இரண்டு நேரங்களுக்கும் ரயில்நிலையம், பேருந்து நிலையமிடையே பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேசனில் ரயில் நிறுத்தம் இல்லை. அதற்கான அனுமதி கேட்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி அனுமதி கிடைத்தால் பெரும்பாலானோர் மேலூர் ஸ்டேஷனில் இறங்கிவிடுவர். அதேவேளை ரயிலில் ஏறும்போது அந்த நிறுத்தம் சாத்தியம் வராது என்கிறார்கள். எந்த பெட்டி, எந்த சீட் என்று தேடி பிடிப்பதற்கு சிறிது நேரம் ஆகும். அப்படியானால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிரதான கீழூர் ஸ்டேஷனுக்குதான் சென்றாகவேண்டும். இரவு 10.00 மணிக்கு மேல்தான் அங்கே செல்ல வேண்டியது உள்ளது. அப்போது பொதுபோக்குவரத்து முடிந்திருக்கும். ஆட்டோ, கார்களை நம்ப முடியாது என்கிற போது சிறப்பு பேருந்து வசதி செய்தாக வேண்டும். மேலூர் ஸ்டேசனில் பஸ் நிறுத்த அனுமதி வந்தால் கூட கீழூர் ஸ்டேசனுக்கு காலையும், இரவிலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதுதான் சரியாக இருக்க முடியும்.
எனவே வழித்தடத்தில் இயக்கி இரவில் முடியும் பேருந்துகளை ரயில்வே ஸ்டேசன் வரை சென்று திரும்பும்படி செய்யலாம். அதுபோல் காலையில் வழித்தடத்திற்கு செல்லும் முன்னதாக ரயில்வே ஸ்டேசனுக்கு சென்று திரும்பி பஸ் ஸ்டாண்டில் இருந்து வழித்தடத்திற்கு செல்லும்படியாகவும் பேருந்துகளை இயக்கலாம். இப்படி எதாவது ஒரு வழியில் காலையிலும், இரவிலும் இரயில்வே ஸ்டேசனுக்கும், பேருந்து நிலையத்துக்கும் இடையே பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.